ஆறுமுகனும், நவீனும் இணைந்து நாடகமாடியே 50 ரூபாவை இல்லாமல் செய்தனர் - வேலை செய்தவர்களுக்கா ஏமாற்றுபவர்களுக்கா வாக்களிப்பது என மக்கள் முடிவெடுக்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 1, 2020

ஆறுமுகனும், நவீனும் இணைந்து நாடகமாடியே 50 ரூபாவை இல்லாமல் செய்தனர் - வேலை செய்தவர்களுக்கா ஏமாற்றுபவர்களுக்கா வாக்களிப்பது என மக்கள் முடிவெடுக்க வேண்டும்

பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் இராதாகிருஷ்ணன் உட்பட மூவர் போட்டியிடுவோம். தேசியப்பட்டியல் ஊடாகவும் ஒருவரை பாராளுமன்றம் அழைத்து செல்வோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் விசேட கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டன் டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமையேற்று உரையாற்றிய திகாம்பரம் மேலும் கூறியதாவது,

அன்று தை பிறந்தால் வழி பிறக்கும் எனச் சொன்னார்கள். அதன் பின்னர் மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா கிடைப்பது உறுதி என்றார்கள். ஆனால் ஏப்ரல் 10 ஆம் திகதியே அது கிடைக்கும் என இன்று அறிவிக்கின்றார்கள்.

ஆயிரம் ரூபா தொடர்பில் கடந்த காலங்களில் எவ்வித கருத்தையும் முன்வைக்காமல் நான் மௌனம் காத்தேன். எதாவது கதைத்திருந்தால் திகாம்பரம்தான் அதனை தடுத்துவிட்டார் என துள்ளி குதித்திருப்பார்கள். எனினும், தற்போது அது பற்றி கதைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது 750 ரூபா வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனுடன் மேலும் 250 ரூபாவை சேர்த்து நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுத்தால், நாம் மாலை அணிவித்து வரவேற்போம்.

எனினும், கொழுந்து அதிகமாக எடுக்க வேண்டும், 75 வீத கட்டாய வரவு இருக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகளை விதித்தும், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றையும் சம்பளத்துடன் சேர்த்துக்காட்டி எப்படியும் ஆயிரம் என்ற முடிவு எடுக்கப்படுமானால் அதனை ஏற்கமுடியாது. தொழிலாளர்களும் ஏற்கமாட்டார்கள்.

அதேவேளை, 50 ரூபாவையே வாங்கிக் கொடுக்க முடியாத திகாம்பரத்துக்கு ஆயிரம் ரூபா பற்றி கதைப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லை என சிலர் விமர்சிக்கின்றனர்.

50 ரூபாவை பெற்றுக் கொடுப்பதற்கு முழு வீச்சுடன் செயற்பட்டேன். நிதி அமைச்சிலிருந்து அதற்கான நிதி பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சுக்கு வழங்கப்பட்டது. எனினும், அமைச்சர் ஆறுமுகனும், முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவும் இணைந்து நாடகமாடியே 50 ரூபாவை இல்லாமல் செய்தனர்.

50 ரூபா தொழிலாளர்களுக்கு கிடைத்துவிட்டால் திகாம்பரத்துக்கு மக்கள் ஆதரவு பெருகிவிடும் என்ற அச்சத்தாலேயே நுவரெலியா மாவட்டத்திலுள்ள இவர்கள் இருவரும் அவ்வாறு செய்தனர்.
கடந்த நான்கரை வருடங்களில் நாம் எமது மக்களுக்கு பல சேவைகளை வழங்கினோம். துரோகம் இழைக்கவில்லை. வேலைகளை செய்துகாட்டிவிட்டுதான் வாக்குகேட்டு வருகின்றோம். 

ஆனால், 80 ஆண்டு கால அரசியல்வாதிகள், இனிதான் செய்யப்போகின்றோம் என கூறுகின்றனர். ஆகவே, வேலை செய்தவர்களுக்கு வாக்களிப்பதா அல்லது ஏமாற்றுபவர்களுக்கு வாக்களிப்பதா என மக்கள் முடிவெடுக்க வேண்டும்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே நாம் முடிவுகளை எடுப்போம். ஆனால், அதற்கு முன்னரே எனக்கும் திகாவுக்கும் பிரச்சினை, உதயாவுக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் பிரச்சினை என்றெல்லாம் கதைகள் பரப்பட்டு வருகின்றன. தொழிலாளர் தேசிய சங்கம், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன மலையக மக்களின் மனங்களைவென்ற பாரிய கட்சிளாகும். எனவே உரிய நேரத்தில் உரிய வகையில் முடிவுகள் எடுக்கப்படும்.

ராதாகிருஷ்ணன் உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணியில் நுவரெலியா மாவட்டத்தில் மூவர் போட்டியிடுவோம். மூவரும் வெற்றி பெறுவோம். தேசியப்பட்டியல் ஊடாகவும் ஒருவரை பாராளுமன்றம் கொண்டுபோவோம்.

மலையகத்தில் உடைக்கவே முடியாத கூட்டணி என்ற பெருமையும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இருக்கின்றது. பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாம் ஆட்சியை பிடிப்போம். நான் மீண்டும் அமைச்சராவேன். அவர்கள் அடிக்கல் நட்டாலும் திட்டங்களை நாமே திறந்து வைப்போம் என்றார்.

No comments:

Post a Comment