தமிழ் மக்களை பிரித்தாளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது - குற்றஞ்சாட்டுகிறார் மாவை - News View

Breaking

Post Top Ad

Saturday, February 29, 2020

தமிழ் மக்களை பிரித்தாளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது - குற்றஞ்சாட்டுகிறார் மாவை

நாட்டில் இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்தி தமிழ் மக்களை பிரித்தாள தற்போதைய அரசாங்கம் எண்ணுவதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அந்த சூழ்ச்சிகளுக்குள் அகப்படாது கடந்த காலங்களில் எவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குனீர்களோ அதே ஆதரவை மக்கள் தொடர்ந்து வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். குருநகர் தொடர்மாடி விளையாட்டு மைதானம் மற்றும் கலை அரங்கத் திறப்பு விழா கடந்த புதன்கிழமை நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டதோ அதன்படியே சென்று கொண்டிருக்கின்றது. நாங்கள் எமக்குக் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்தி முன்னேற்றம் கண்டு வருகின்றோம்.

கடந்த ஆட்சியில் எமக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தினால்தான் பல்வேறு வகையான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது. பல திட்டங்களைச் செய்வதற்கான முயற்சிகள் இருந்தபோதும் சில தடைகள் காரணமாக அவற்றை நிறைவேற்ற முடியாது போனது.

குறித்த காலத்தில்தான் வட பகுதிக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயலுமான வரையும் கிடைத்த உதவியைக் கொண்டு பல வேலைத்திட்டங்களைச் செய்து முடித்துள்ளோம். அந்தத் திட்டத்தின் கீழ்தான் இந்த மைதானத்துக்கும் பல்வேறு உதவிகளைச் செய்து முடித்துள்ளோம்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் எமக்கு இது போதியதாக இல்லை. சர்வதேசம் எம்மீது பார்வையைச் செலுத்துகின்றது. அந்தப் பார்வையின் ஊடாக நாங்கள் எங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இன்று எங்கள் மத்தியில் இருப்பவர்கள் பிரிந்து செல்கின்ற நிலையுள்ளது. அவர்கள் ஏன் பிரிந்து செல்கின்றார்கள் என்பதை மக்களாகிய நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருக்கின்ற போதுதான் மக்களுக்காக உரையாடுகின்ற நிலைமை இருக்கும். இதை சிதைப்பதற்காகத்தான் பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். குறித்த விடயங்கள் தொடர்பாக மக்கள் அவதானமாக இருந்து கூட்டமைப்புக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்க வேண்டும்” என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad