ஜனாதிபதி கோட்டாபய நாட்டில் சுபீட்சத்தினை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றி, பொருட்களின் விலைகளைக் குறைத்து நாட்டை சமாதானமாகக் கொண்டு செல்கின்றார் - News View

Breaking

Post Top Ad

Monday, February 24, 2020

ஜனாதிபதி கோட்டாபய நாட்டில் சுபீட்சத்தினை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றி, பொருட்களின் விலைகளைக் குறைத்து நாட்டை சமாதானமாகக் கொண்டு செல்கின்றார்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

கடந்த கால அரசாங்கத்தினர் அமெரிக்காவுடன் பல ஒப்பந்தங்களைச் செய்து யுத்தத்தை ஏற்படுத்த பல திட்டங்களை வகுத்தனர் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் வடமத்திய மாகாண ஆளுநருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

ஓட்டமாவடி-மீராவோடை மக்களுடனான சந்திப்பு மீராவோடை அந்நூர் கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கடந்த கால அரசாங்கத்தினர் அமெரிக்காவுடன் பல ஒப்பந்தங்களைச் செய்து நாட்டில் யுத்தத்தை ஏற்படுத்துவதற்கு பல திட்டங்களை வகுத்துள்ளனர். எமது நாட்டினுடைய வளங்கள் மற்றும் பொருளாதாரத்தினைப் பெற்று மேற்கத்தேய நாடுகளில் சுகபோகங்களைப் பெற்றுக் கொள்ள ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். கடந்த கால அரசாங்கத்தினர் இம்முறையும் வந்திருந்தால், இந்நிலைமை தொடர்ந்து ஏற்பட்டிருக்கும். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று நாட்டில் சுபீட்சத்தினை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றி, பொருட்களின் விலைகளைக் குறைத்து நாட்டை சமாதானமாகக் கொண்டு செல்கின்றார்.
தற்போது பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், நாட்டு மக்களாகிய நாமனைவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் ஒன்றிணைந்து நிற்போம். எனவே, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் மீண்டும் ஆட்சியமைக்க அனைவரும் கைகோர்த்துச் செயற்பட வேண்டும். 

இந்நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் இன, மத, பேதங்களுக்கப்பால் ஒரு சக்தியாக இயங்குவதற்கு ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் சுபீட்சத்திற்கு தற்போதைய அரசாங்கம் நிலைத்திருக்க பாடுபட வேண்டும்.

வேறு கட்சிகளின் நோக்கங்களில் செவி சாய்க்காமல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நோக்கங்களில் பின்னால் அனைவரும் கைகோர்த்து நிற்க வேண்டும். தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் மக்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிங்கள மக்களுக்கு ஐக்கிய தேசிய கட்சிகள் உள்ளது. ஆனால், அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாத்திரமேயுள்ளது. 
ஆனால், தற்போது உருவாகியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது அனைத்து மக்களுக்கும் சேவை செய்யக் கூடிய வகையில் வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் அமைச்சராக இருந்த போது பல மூலதனங்களைக் கொண்டு பல உற்பத்திகளை மேற்கொண்டேன். கடந்த கால அரசாங்கத்தினர் அதனைச் செய்யாமலிருந்தார்கள். தற்போது மூலதனங்களைக் கொண்டு பல உற்பத்திகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருகின்றோம். தற்போதுள்ள ஆட்சியிலும் இடம்பெறுமென்று நம்புகின்றேன். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வேலையற்ற இளைஞர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கு பல நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். நான் அமைச்சராக இருந்த போது, முப்பதாயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினேன். அதேபோன்று, இந்த அரசாங்கத்தின் மூலம் வழங்க அரசாங்கம் உறுதுணை வழங்க வேண்டும்.
ஏ.பி.ஆர்.சி என்ற அமைப்பினை உருவாக்கி இதன் மூலம் நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் தேசிய நல்லிணக்க ஒற்றுமையைக் கொண்டு வருவதற்கான வேலைத் திட்டங்களைச் செய்து வருகின்றோம். 

உலக நாடுகளில் சிரியா, ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற நாடுகளை யுத்த தளமாகக்கொண்டு முஸ்லிம்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி அமெரிக்கா சுகபோகம் செய்கின்றனர். இதற்காகவே எமது அமைப்பு பல தீர்வுகளைச் செய்து வருகின்றது.

கடந்த வரும் ஈஸ்டர் படுகொலையைச் செய்தவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் என உங்களுக்குத் தெரியும். இந்த தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்கா. எமது நாட்டின் பொருளாதாரத்தினை சூரையாடி அமெரிக்காவிற்கு கொண்டு செல்வதற்கான வழிகளை உண்டாகுவதற்கு, குழப்பங்களை ஏற்படுத்தி, இனங்களுக்கிடையில் ஒன்றுமையைச் சீர்குலைத்து தங்களது நோக்கங்களை நிறைவேற்றவே செயற்பட்டனர்.
லங்கா சமசமாஜ கட்சி முதல் கட்சியாகச் செயற்பட்டு வந்தது. பல சேவைகளைச் செய்து வந்தது. அந்த வகையில், தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எந்தவித பாகுபாடுகளுமின்றி நாட்டிலுள்ள அனைவரும் ஒரே இனமாக ஒரே கொடியின் கீழ் சேவை செய்து வருவதுடன், அனைவரும் சமாதானத்துடன் வாழ வேண்டுமென்ற நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றோம்.

தற்போது நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளோம். எனவே, தேசிய ஒற்றுமையுடன் அனைவரையும் ஒன்று சேர்ந்து நாட்டின் அபிவிருத்தி, விஞ்ஞான தொழில்நுட்ப அபிவிருத்தியையும் கொண்டு செல்வோம் என்றார்.

மனித உரிமைகள் சுயாதீன செயற்பாட்டாளர் எஸ்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இட்மபெற்றது. கலந்து கொண்ட மாணவர்களுக்கு வடமத்திய மாகாண ஆளுனர் திஸ்ஸ விதாரணவினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad