பொலிஸாரின் அசமந்த போக்கின் காரணமாக தேடப்படும் சந்தேக நபர்கள் தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் - News View

Breaking

Post Top Ad

Monday, February 24, 2020

பொலிஸாரின் அசமந்த போக்கின் காரணமாக தேடப்படும் சந்தேக நபர்கள் தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல்

பாறுக் ஷிஹான்

பொலிஸாரின் அசமந்த போக்கின் காரணமாக தேடப்படும் சந்தேக நபர்கள் தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறீன் பில்ட் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் எம்.ஐ. பதிருதீன் என்பவர் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதி இனந்தெரியாத நபர்களினால் அலவாங்கு மூலம் கை கால் நெஞ்சுப்பகுதி உடைக்கபட்ட நிலையில் தாக்குதலுக்கு உள்ளானார்.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான நபர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று கல்முனை பிராந்திய மனித உரிமை காரியாலயத்திற்கு முறைப்பாட்டு மகஜர் ஒன்றினை சமர்ப்பித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டில் தான் தாக்குதலுக்கு உள்ளாகி 40 நாட்களிற்கு மேலாக நாட்கள் சென்றுவிட்டதாகவும் தன்னை தாக்கிய சந்தேக நபர்களை பொலிஸாருக்கு இனங்காட்டிய போதிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனினும் தினமும் தன்னை தாக்கிய சந்தேக நபர்கள் தன்னை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்ததுடன் குறித்த விடயத்தில் உரிய நியாயம் கிடைக்கப் பெறாமையினால் கல்முனை நீதிமன்ற நீதிவானிற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மேலும் தாக்குதல் சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை பொலிஸாருக்கு வழங்கிய நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமையினால் மனித உரிமை காரியாலத்தில் தஞ்சமடைந்துள்ளதாகவும் 3 பெண் பிள்ளைகளை கொண்ட எனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு உரிய தரப்பினர் கவனமெடுக்க வேண்டும் என அழுது கேட்டுக்கொண்டார்.

இச்சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் தனது கருத்தில் ஒரு கிழமைக்குள் குறித்த விடயத்தினை விசாரணை நடத்தி சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உரிய தரப்பினை அறிவுறுத்துவதாகவும் விசேடமாக இவ்விடயம் குறித்து உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்து கடமை தவறிய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad