(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் வீடுகளுக்கு கல்லெறிந்தவர்கள், தமக்கு ஏற்றால் போல் தீர்ப்பளிக்காத காரணத்தால் பிரதம நீதியரசரை பதவி விலக்கியவர்கள் நீதித்துறையின் சுயாதீனம் பற்றி சபையில் பேசுகிறார்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் எவருக்கும் விதிவிலக்களிக்கப்படாதென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தற்போதைய ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதிகளையும் விட மாறுபட்ட வகையில் செயற்படுகிறார். நாட்டின் முத்துறைகளான நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறைகளின் அதிகாரங்கள் கடந்த காலங்களில் முறையற்றதாக பயன்படுத்தப்பட்டன. நீதித்துறைக்கு அரச அதிகாரத்தால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் ஆயுள் முழுதும் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தை கொண்டுவந்தார். அதற்கு பலர் ஆதரவளித்தார்கள்.
அதேபோல் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன பாராளுமன்ற உறுப்பினர்களை அடக்குவதற்காக பதவி விலகல் கடிதத்தை ஆரம்பத்திலேயே பெற்றுக்கொண்டு தனக்கு ஏற்றாட்போல் அவர்களை செயற்படுத்தினார்.
நீதித்துறைக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது என்று எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள். உயர் நீதிமன்ற நீதியரசர்களின் வீடுகளுக்கு கல்லெறிந்தவர்கள், தமக்கு ஏற்றாட்போல் தீர்ப்பளிக்காத காரணத்தால் பிரதம நீதியரசரை பதவி விலக்கியவர்கள் இன்று நீதித்துறையின் சுயாதீனம் பற்றி சபையில் பேசுகிறார்கள்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட ஒட்டு மொத்த மக்களும் ஆதரவளித்துள்ளார்கள். கடந்த கால ஜனாதிபதிகள் மக்களாணையை புறக்கணித்து விட்டு தமது ஆணைக்கமைய செயற்பட்டார்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களாணையை செயற்படுத்த கடுமையான தீர்மானங்களை செயற்படுத்துவார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்காக ஒரு தரப்பினர் தயிர், கறுப்பு தொதல் மற்றும் பாற்சோறு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு 'வாழ்க வாழ்க' என்று செல்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளினால் மக்களாணையை மலினப்படுத்த முடியாது என்றார்.
No comments:
Post a Comment