(எம்.மனோசித்ரா)
அரசாங்கம் எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகித்தபோது தேர்தல்கள் தாமதிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால் அவர்களின் ஆட்சியிலும் மாகாண சபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் அதன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய சுதந்திர முன்னணி வலியுறுத்தியுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கான கருத்தரங்கு சனிக்கிழமை (16) கொழும்பு - டாலி வீதியிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இதன் போது கருத்து வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகித்தபோது தேர்தல்கள் தாமதிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியிருக்கிறது. பாரிய ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருக்கின்றன. ஆனால் தற்போது அவர்களுக்கு அதிகாரம் கிடைத்திருக்கிறது.
எனவே அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும். எதிர்க்கட்சிகள் என்ற ரீதியில் இதனையே நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.
5 ஆண்டுகளுக்கு தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணையை வழங்கியிருக்கின்றனர். தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை எந்தளவுக்கு அரசாங்கம் நிறைவேற்றியிருக்கிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
எவ்வாறிருப்பினும் அரசாங்கத்துக்கு ஆதரவளித்த பெரும்பாலான மக்கள் முன்னர் கொண்டிருந்த நம்பிக்கையை தற்போது இழந்துள்ளனர். இதுவே யதார்த்தமாகும் என்றார்.
இதன் போது கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா, மாகாண சபைத் தேர்தல் நாட்டுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். பல ஆண்டுகள் இந்தத் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இதுவே சிறந்த காலம் என்று எண்ணுகின்றோம்.
எதிர்க்கட்சிகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். கோட்டாபய ராஜபக்ஷவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தார்.
ஆனால் இரண்டு ஆண்டுகளில் அவரது ஆட்சி வீழ்ச்சியடைந்தது. எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தாலும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையே அனைத்தையும் தீர்மானிக்கிறது.
நாட்டின் பொருளாதார நிலைமை ஸ்திரமாகக் காணப்பட்டால் மாத்திரமே எந்தவொரு அரசாங்கத்துக்கும் நிலைத்திருக்க முடியும். எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பில் சகல எதிர்க்கட்சிகளுடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
இதன் போது கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, புதிய அரசியல் சக்தியொன்று ஆட்சியமைத்துள்ள நிலையில் ஓராண்டுக்குள் அந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு திட்டமிடுவது பொறுத்தமற்றது. அவ்வாறான முயற்சிகளையும் எதிர்க்கட்சிகள் எடுக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி நம்பிக்கை வைத்து மக்கள் அவர்களை தெரிவு செய்திருக்கின்றனர். எனவே அவர்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.
எவ்வாறிருப்பினும் எதிர்கால அரசியலைக் கருத்திற் கொண்டு சகல எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியாக ஒன்று திரட்டும் செயற்பாடுகளையே நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment