(இராஜதுரை ஹஷான்)
பிரிவினைவாத கொள்கை கொண்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. இவர்களை மகிழ்விப்பதற்காக எதிர்வரும் ஆண்டு முதல் காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பை அரசாங்கம் விடுக்கும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர கொண்டுவந்த இலங்கை மின்சார சபை (திருத்தச்) சட்டத்தை தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கவாதியான கடுவலை மாநகர சபையின் தற்போதைய மேயர் ரஞ்சன் ஜயலால் சட்டவரைபை தீ வைத்து கொளுத்தினார்.
காஞ்சன விஜேசேகர கொண்டுவந்த சட்டத்தில் போலியான திருத்தங்களை செய்து அண்மையில் இலங்கை மின்சார சபை (திருத்தச்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
அன்று எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்று முழுமையான ஆதரவளித்துள்ளார்கள். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இவ்விடயம் தொடர்பில் ஏதும் பேசுவதில்லை.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மின்சார சபை (திருத்தச்) சட்டத்தினால் இலங்கையின் மின்சாரம் மற்றும் வலுசக்தித்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படும்.
வலுசக்தி துறையின் சுயாதீனத்தை பிற நாடுகளுக்கு விட்டுக் கொடுத்து நாட்டின் இறையாண்மையை அரசாங்கம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
பிரிவினைவாத கொள்கை கொண்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. இவர்களை மகிழ்விப்பதற்காக எதிர்வரும் ஆண்டு முதல் காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பை அரசாங்கம் விடுக்கும்.
மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டால் நாட்டில் தேவையில்லா பிரச்சினைகள் ஏற்படும். அண்மையில் நிறைவேற்றப்பட்ட மின்சார திருத்தச் சட்டத்தால் வலுசக்தி துறையின் தனியுரிமை கூறாக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment