(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)
பயங்கரவாத தடைச் சட்டம் நிபந்தனையற்ற வகையில் நீக்கப்பட வேண்டும். இந்த சட்டம் இலங்கை அரசுக்கு கேவலத்தை, அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஜனநாயக நாடா என்று கேள்வியெழுப்பப்படுகிறது. இளைஞர்கள் ஆயுதமேந்துவதற்கு இந்த சட்டம் தூண்டியுள்ளது. அத்துடன் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாட பயங்கரவாத தடைச் சட்டம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. ஜே.ஆர். ஜயவர்தன கொண்டு வந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதன் பெருமையை பெற்றுக் கொள்ளுங்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பற்றி மிகவும் முக்கியமான தருணத்தில்தான் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் சபை ஒத்திவைப்பு விவாதத்தை கொண்டு வந்துள்ளார். 1948ஆம் ஆண்டு கிடைக்கப் பெற்ற சுதந்திரத்தை அனைத்து இன மக்களும் அனுபவித்துள்ளார்களா என்ற கேள்வியெழுந்தள்ளது. இந்த நாடு சுமார் 50 ஆண்டு காலமாக பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியவற்றால் ஆளப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன 1979 ஆம் ஆண்டு 6 மாத காலத்தை வரையறுத்து தற்காலிக ஏற்பாடாக கொண்டுவந்த பயங்கரவாத தடைச் சட்டம் இன்றளவில் நடைமுறையில் உள்ளது. ஜனநாயக நாட்டை பயங்கரவாதச் சட்டம் 50 ஆண்டு காலமாக ஆள்வது என்றால் அதன் விளைவுகளை சிந்தித்துப் பாருங்கள்.
அப்பாவி தமிழ், முஸ்லிம் மக்களையும் ஏனையவர்களையும் குற்றவாளிகளாக்கும் சட்டமாகவே பயங்கரவாத தடைச் சட்டம் காணப்படுகிறது. கடத்தல், காணாமலாக்குதல், புதைகுழிகளில் புதைத்தல் போன்ற கொடூர செயல்களுக்கு இந்த பயங்கரவாத தடைச் சட்டம் உதவியுள்ளது.
இந்த சட்டத்தால் கைது செய்யப்பட்டவர்களுக்கு கொடூர சித்திரவதைகள் வழங்கப்பட்டுள்ளன. தலைகீழாக தொங்கவிடப்பட்டு, செத்தல் மிளகாயை நெருப்பில் போட்டு வெளிவரும் புகையை சுவாசிக்க செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதாக குட்டிமணி, ஜெகன், தங்கதுரை மற்றும் நடேசன் ஆகியோர் நீதிமன்றத்துக்கு குறிப்பிட்டுள்ளார்கள்.
கொடூர சித்திரவதைகள் ஊடாக பெற்றுக் கொண்ட ஒப்புதல் வாக்குமூலம் ஊடாக பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளன. அப்பாவி இளைஞர்கள் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையில் பல சித்திரவதைகள் அங்கு இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கு சாட்சியங்களாக பலர் இன்றும் வாழ்கிறார்கள்.
பயங்கரவாத தடைச் சட்டம் நிபந்தனையற்ற வகையில் நீக்கப்பட வேண்டும். இந்த சட்டம் இலங்கை அரசுக்கு கேவலத்தை, அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஜனநாயக நாடா என்று கேள்வியெழுப்பப்படுகிறது. இளைஞர்கள் ஆயுதமேந்துவதற்கு இந்த சட்டம் தூண்டியுள்ளது. அத்துடன் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாட பயங்கரவாத தடைச் சட்டம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
அரசாங்கத்தின் பிரதான மூன்று உறுப்பினர்கள் கடந்த காலங்களில் எதிர்க்கட்சியாக இருக்கும் போது பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று எம்முடன் இணைந்து குரல் கொடுத்தார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக கொண்டுவரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் பயங்கரமானது என்றும் குறிப்பிட்டார்கள்.
பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயரிலான சட்டங்கள் இந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பயங்கரமானது என்றே குறிப்பிட வேண்டும். அவ்வாறு இடம்பெற்றால் இலங்கை குடியாட்சி நாடா என்று கேள்வியெழுப்பப்படும். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கினோம் என்ற பெருமையை பெற்றுக் கொள்ளுங்கள்.
ஊடக அடக்குமுறை பற்றி குறிப்பிட வேண்டும். கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். ஐயாதுரை நடேசன் என்ற ஊடகவியலாளர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். முறையான விசாரணைகளை மேற்கொண்டால் பல விடயங்கள் வெளிவரும். சிவராம், சுகிர்தராஜா ஆகியோர் விவகாரம் குறித்தும் முறையாக ஆராய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment