(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரிகளை மறைக்க வேண்டிய தேவை ராஜபக்ஷர்களுக்கு மாத்திரமின்றி எதிர்க்கட்சிகளுக்கும் காணப்படுவதாகவே தெரிகிறது. எவ்வாறான தடைகள், இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய உண்மையான சூத்திரதாரிகளை வெளிப்படுத்தும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சியின் தேவைக்கேற்ப நாம் செயற்படப் போவதில்லை. உண்மையான விசாரணைகளை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகளால் மேற்கொள்ளப்படும் குண்டுத் தாக்குதல்களில் நாம் சிக்கிக் கொள்ளப் போவதுமில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக இடம்பெறாதபோது சஜித் பிரேமதாச தரப்பினரால் அருண ஜயசேகரவின் பெயர் எந்த சந்தர்ப்பத்திலும் குறிப்பிடப்படவில்லை.
அதன் பின்னர் இந்த விசாரணை நடவடிக்கைகளை நாம் சரியாக முன்னெடுத்து குறிப்பிட்ட வழிமுறைகளின் கீழ் பிரதான சூத்திரதாரிகள், இதற்கு ஆதரவளித்தோர், இதில் அரசியல் இலாபமீட்டியோர் தொடர்பில் முறையாக விசாரணைகள் முன்னெடுத்துச் செல்லப்படும் இந்த சந்தர்ப்பத்தில்தான் அவர்கள் இந்த விவகாரத்தை கைகளில் எடுத்துள்ளனர்.
தகவல் தெரிந்திருந்தும் பாதுகாப்பினை வழங்காத ஒரு தரப்பினர் இருக்கும் அதேவேளை, மறுபுறம் இதற்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டிய இன்னுமொரு தரப்பினரும் உள்ளனர். அது தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
பாராளுமன்ற விசாரணைக் குழுவில் சஜித் பிரேமதாச தரப்பு எம்.பி.க்களும் அங்கத்துவம் வகித்தனர். அந்த சந்தர்ப்பங்களை விடுத்து இப்போது எதற்காக கூறுகின்றனர். இப்போது எதற்காக அரசாங்கத்திலுள்ள ஒருவரை இதனுடன் தொடர்புபடுத்த முயற்சிக்கின்றனர்? இந்த தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரிகளை மறைக்க வேண்டிய தேவை ராஜபக்ஷர்களுக்கு மாத்திரமின்றி எதிர்க்கட்சிகளுக்கும் காணப்படுவதாகவே தெரிகிறது.
நம்பிக்கையில்லா பிரேரணைகளுக்கு நாம் அஞ்சப்போவதில்லை. எவ்வாறான தடைகள், இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய உண்மையான சூத்திரதாரிகளை வெளிப்படுத்தும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகாது என்றார்.
No comments:
Post a Comment