(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)
இலங்கை மத்திய வங்கியானது நிதி அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் வலியுறுத்தலின்றி நாணயத்தை அச்சிட்டிருந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். விரிவாக்கப்பட்ட நிதி விநியோகம், நாணயம் அச்சிடல் மற்றும் நாணயக் கொள்கையின் இலக்கை அடையாமல் இருப்பது தொடர்பில் கலந்துரையாட இலங்கை மத்திய வங்கியை அரச நிதி பற்றிய தெரிவுக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாணயம் அச்சிடல் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அஜித் தென்னக்கோன் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த கடந்த செவ்வாய்க்கிழமை சபையில் பதிலளித்திருந்தார். அரசாங்கம் நாணயம் அச்சிடவில்லை. அந்த பொறுப்பு இலங்கை மத்திய வங்கிக்கு உண்டு என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை மத்திய வங்கிக்கும், நிதி அமைச்சுக்கும் இடையிலான முரண்பாடு 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணியாக அமைந்தது. இலங்கை மத்திய வங்கி தன்னிச்சையான முறையில் நாணயம் அச்சிட்டது. இதனை அரசியல்வாதிகள் பாதுகாத்தமை நாடு வங்குரோத்து நிலையடையும் வரை எவரும் அறியவில்லை. மத்திய வங்கி இன்றும் அவ்வாறே செயற்படுகிறது என்பது பிரதி அமைச்சரின் கூற்றில் இருந்து விளங்குகிறது.
பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் 121ஆம் பிரிவின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு மற்றும் பாராளுமன்றத்துக்கு நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் அறிக்கையிடும் பொறுப்பு இலங்கை மத்திய வங்கிக்கும், நிதி அமைச்சுக்கும் உண்டு.
பிரதி அமைச்சரின் கூற்றின்படி, இலங்கை மத்திய வங்கியானது நிதி அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் வலியுறுத்தலின்றி நாணயத்தை அச்சிட்டிருந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். 2024ஆம் ஆண்டு 45ஆம் இலக்க பொருளாதார பரிவர்த்தனை சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட முடியாது.
விரிவாக்கப்பட்ட நிதி விநியோகம், நாணயம் அச்சிடல் மற்றும் நாணயக் கொள்கையின் இலக்கை அடையாமல் இருப்பது தொடர்பில் கலந்துரையாட இலங்கை மத்திய வங்கியை அரச நிதி பற்றிய தெரிவுக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment