ஒரு தரப்பினரை மாத்திரம் வேறுபடுத்தி பார்க்க முடியாது : தவறுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் - பிரதமர் ஹரிணி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 22, 2025

ஒரு தரப்பினரை மாத்திரம் வேறுபடுத்தி பார்க்க முடியாது : தவறுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் - பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜனநாயகம் மற்றும் அடிப்படை உரிமைகளை முன்னிலைப்படுத்தியே நாங்கள் செயற்படுகிறோம். மனித உரிமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கொண்டுவந்த இந்த பிரேரணைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மனித உரிமை விடயத்தில் ஒரு தரப்பினரை மாத்திரம் வேறுபடுத்தி பார்க்க முடியாது. எங்கு தவறிழைத்தோம் என்று விளங்கிக் கொண்டு தவறுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பல்லின சமூகத்துக்குரிய மரியாதைகள் மற்றும் உரிமைகளை அவரவருக்கு முறையாக வழங்கினால் முரண்பாடுகள் தோற்றம் பெறாது. சகல மக்களினதும் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகத்தை உருவாக்கி சட்டவாட்சியை உ றுதிப்படுத்தியுள்ளோம்.

கடந்த காலங்களில் அரசியல் கட்டமைப்பில் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு பிறிதொரு தரப்பினர் புறக்கணிக்கப்பட்டதால் இந்த நாட்டில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. இவ்வாறான காரணிகளால்தான் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

கடந்த காலங்களில் மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு சட்டத்தால் தண்டனையளிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மாற்று தீர்வு நடவடிக்கைகளை நாட முனைந்தார்கள். இன்று இந்நிலைமை மாறியுள்ளது. சட்டத்தால் அனைவரும் சமமாக மதிக்கப்படுகிறார்கள். சட்டம் சுயாதீனமான முறையில் செயற்படுத்தப்படுகிறது.

ஜனநாயகம் மற்றும் அடிப்படை உரிமைகளை முன்னிலைப்படுத்தியே நாங்கள் செயற்படுகிறோம். மனித உரிமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கொண்டுவந்த இந்த பிரேரணைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித உரிமை விடயத்தில் ஒரு தரப்பினரை மாத்திரம் வேறுபடுத்தி பார்க்க முடியாது. எங்கு தவறிழைத்தோம் என்று விளங்கிக் கொண்டு தவறுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment