(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)
தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் கணினிகளில் இருந்த தரவுகள் அழிக்கப்பட்டதால் பாரியளவான மோசடிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அன்று காணப்பட்டது. இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யார் என்பது நீதிமன்ற விசாரணைகள் ஊடாக வெளிப்படுத்தப்படும் என சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் ஹன்ஷக விஜேமுனி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வில் வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் கணினிகளில் இருந்த தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் 2021.07.09 ஆம் திகதியன்று அறிக்கையிடப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் எபிக் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான தரிந்து தர்ஷன என்பவர் 2021.08.09 ஆம் திகதியன்றும், அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் பிரிவின் உதவி பொறியியலாளரான திலுப் ராமநாயக்க என்பவர் 2021.09.29 ஆம் திகதியன்றும் கைது செய்யப்பட்டார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை 2021.07.28 ஆம் திகதியன்று குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அளித்த முறைப்பாட்டுக்கமைய குற்றப்புலனாய்வு பிரிவின் டிஜிட்டல் தடயவியல் பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுக்கு சாட்சிமளித்த இரண்டாம் சந்தேகநபரான திலுப ராமநாயக்க என்பவர் தமது செயற்பாடுகளினால் கணினி கட்டமைப்பில் இருந்த தரவுகள் அழிக்கப்பட்டதாக எழுத்து மூலமாக ஒப்புதலளித்துள்ளார். இதுவும் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தரவுகள் அழிக்கப்பட்டதால் பாரியளவான மோசடிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அன்று காணப்பட்டது. இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யார் என்பது நீதிமன்ற விசாரணைகள் ஊடாக வெளிப்படுத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment