(எம்.மனோசித்ரா)
வைத்தியர்களின் இடமாற்ற பட்டியல் விவகாரத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பரிந்துரைகளையும் கவனத்தில் கொள்ளுமாறு அவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையை ஏற்று மக்களுக்கு தடையற்ற மருத்துவ சேவை வழங்கப்படுவதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்துவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், வைத்தியர்களின் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அவற்றின் அடிப்படையில் சில அதிகாரிகளின் செயற்பாடுகள் பொறுத்தமற்றவையாக இருக்கலாம். சில நியமனங்களின்போது தகுதியானவர்கள் தொடர்பில் மாறுபட்ட தீர்மானங்கள் எடுக்கப்படக் கூடும்.
கடந்த தேர்தல்களில் மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கமைய நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒவ்வொரு துறைகளிலும் பொறுத்தமானவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுகிறது. எவ்வாறிருப்பினும் சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. சுகாதார அமைச்சினை பொதுப்படுத்த வேண்டிய தேவை இல்லை.
மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ள சில கோரிக்கைகள் உள்ளன. அவை தொடர்பில் அந்த சங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இடைநிலை வைத்தியர்களுக்கான நியமனத்தின்போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பரிந்துரைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் பரிந்துரையாக இருந்தது.
அந்த வகையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் அதிகாரிகள் பிரச்சினையல்ல. சுகாதார அமைச்சினால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும். பேச்சுவார்த்தைகள் விடயம் குறித்த அறிவுடன் முன்னெடுக்கப்பட்டால் பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என்றார்.
No comments:
Post a Comment