454 ஊழியர்களையும் பணியிணைப்புச் செய்யுங்கள் என்றார் ரவிகரன் எம்.பி : அரசும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது என்றார் சுகாதார பிரதி அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Friday, August 22, 2025

454 ஊழியர்களையும் பணியிணைப்புச் செய்யுங்கள் என்றார் ரவிகரன் எம்.பி : அரசும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது என்றார் சுகாதார பிரதி அமைச்சர்

வடமாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சுகாதார ஊழியர் (தரம் - III) சேவைக்கு முறையாக நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 454 சுகாதார ஊழியர்கள் இதுவரை பணியிணைப்புச்செய்யப்படாமை குறித்து வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 22.08.2025இன்று பாராளுமன்றில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் சுகாதரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சிடம் கேள்விஎழுப்பியிருந்தார்.

அத்தோடு வடமாகாணத்தில் சுகாதாரச்சேவைகளை வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு 643 சுகாதார ஊழியர்களின் வெற்றிடங்கள் தடையாக உள்ளதைச் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், 2019ஆம் ஆண்டில் முறையாக நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட 454பேரையும் விரைந்து பணியிணைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது வலியுறுத்தினார்.

இந்நிலையில் கடந்தகாலத்தில் முற்றுமுழுதான அரசியல் தலையீட்டுடன் இந்த 454பேருடைய பணிஇணைப்பு நிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித் சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, அவ்வாறு நியமனம் வழங்கப்பட்ட சுகாதார ஊழியர்களை இரத்துச்செய்வதற்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

ஆகவே குறித்த சுகாதார ஊழியர்களாக பணிநியமனம் வழங்கப்பட்டு, பணி இணைப்புச் செய்யப்படாத 454பேரையும் பணியில் இணைத்துக்கொள்ளும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கமும் உள்ளதாகவும் பிரதிஅமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மேற்படி பணிவெற்றிடங்களை நிரப்புவதற்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தால் 2019.03.28ஆம் திகதியிடப்பட்ட கடித எண் DMS/NP/0302 மூலம் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இதற்குரிய நேர்முகத் தேர்வுகள் 2019.05.27 தொடக்கம் 2019.06.18 ஆம் திகதி வரை நடாத்தப்பட்டன.

அதன்படி, நேர்முகத்தேர்வில் கலந்துகொண்ட தகுதிவாய்ந்த 454பேருக்கு 2019.11.18ஆம் திகதிதிகதியிட்ட நியமனக்கடிதங்கள் அனுப்பப்பட்டன. அவைகள், பதிவுத்தபால்மூலம் அனுப்பப்பட்டு 2019.11.25ஆம் திகதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு அறிக்கையிடுமாறு அறிவிக்கப்பட்டனர்.இருப்பினும் 2019 சனாதிபதித் தேர்தல் காரணமாக, அனைத்து ஆட்சேர்ப்புகளும் தற்காலிகமாக நிறுத்திவைப்பது என்ற தலைப்பில் சனாதிபதி செயலகம் ஒரு கடிதத்தை வெளியிட்டது.

இந்நிலையில் 2011.03.28ஆம் திகதியிட்ட கொள்கை ஆட்சேர்ப்பு கடிதத்தின்படி வடக்கு மாகாண பிரதம செயலாளர் மேற்படி ஆட்சேர்ப்பு செயல்முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில் நியமனக் கடிதங்கள் பெற்றவர்களை பணியில் இணைத்துக்கொள்ளமுடியவில்லை.

முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 2020.12.26 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி , ஆரம்ப சேவைகள் PL பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு பல்நோக்கு அபிவிருத்தி பணிக்குழுவால் மேற்கொள்ளப்படவேண்டும். இருப்பினும் வடமாகாண ஆளுநர், ஆளுநரின் தலைமைச் செயலாளர் மறறும் சுகாதார அமைச்சு மேற்படி ஆட்சேர்ப்புகள் தொடர்பாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களம், நிதி அமைச்சு மற்றும் சனாதிபதி அலுவலகத்திற்கு பல கோரிக்கைகளை சமர்ப்பித்திருந்தாலும் இதுவரை எந்த நேர்வயமாக பதிலும் கிடைக்கவில்லை. எனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சேவையின் கடமைகளை ஏற்க முடியவில்லை. மேலும் இது தொடர்பாக தற்போது யாழ்ப்பாண உயர் நீதி மன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.

பணியாளர் பற்றாக்குறை சுகாதார சேவைகளின் பராமரிப்பை பாதிக்கிறது. ஆனால் நோயாளி பராமரிப்பு சேவைகள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்படுகின்றன.

குறித்த சுகாதார உதவி ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண தலைமைச் செயலாளர் மூலம் மேலாண்மை சேவைகள் துறைக்கு, அதாவது நிதி அமைச்சகத்திற்கு மீண்டும் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன, மேலும் உரிய ஒப்புதல் கிடைத்தவுடன், தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நிச்சயமாக இந்தவிடயத்தில் அரச திணைக்களங்கள்மீது தவறுகள் உள்ளன என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஏன்எனில் இந்த விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றி அதன் பிறகு ஆறுவருடங்களாக வேலைக்காக காத்திருக்கின்றனர்.

இதனைவிட வடமாகாணத்தில் 643 சுகாதார வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் 454பேர் நேர்முகத் தேர்வுகளுடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை பணியில் இணைத்துக்கொள்ளும் விடயத்தில் இவ்வளவுகாலமாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவருகின்றது. இவ்வாறு இழுத்தடிப்பு செய்வதானது மக்கள் அரசதிணைக்களங்களிலுள்ள நம்பிக்கையை இழக்கச்செய்வதாக அமைகின்றது.

அந்த ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். ஏற்கனவே அவர்கள் தொண்டர் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டவர்கள். அதன்பின்னரே நேர்முகத் தேர்வினூடாகத் தெரிவுசெய்ப்பட்டிருந்தனர். எனவே இவர்களை விரைந்து பணியில் இணைத்துக்கொள்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.

இந்நிலையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், உங்களுடைய கருத்தில்தான் நாங்களும் இருக்கிறோம். உங்களுத் தெரியும். 2019 சனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கம் அதன் பிறகு இல்லாமல்போது. அதன் பிறகு வந்த அரசாங்கம் செய்யப்பட்ட நியமனங்களை இரத்து செய்து அந்த சுற்றறிக்கைகளை வெளியிட்டது. ஆனால் அவ்வாறு நியமனம் வழங்கப்பட்ட சுகாதார உதவிப் பணியாளர்களை இரத்துச்செய்வதற்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதனால்தான் அவர்களுக்கு அந்த நியமனங்கள் வழங்கப்படவேண்டுமென நாங்கள் கூறுகின்றோம். முற்றுமுழுதாக அரசியல் செல்வாக்கு காரணமாகவே அது முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டுள்ளது. அரசாங்கமாக, அந்த நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என்றே நாங்கள் தொடர்ச்சியாக கூறிவருகிறோம் - என்றார்.

No comments:

Post a Comment