தெற்கு காசாவில் உதவியை பெறுவதற்கு காத்திருந்த பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலியப் படை நேற்று (17) நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உதவி விநியோகத் தளத்தில் இடம்பெறும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கான் யூனிஸ் நகரின் பிரதான கிழக்கு வீதியை ஒட்டி உதவி லொறிகள் வரும் வரை பெரும் திரளாக காத்திருந்த பலஸ்தீனர்கள் மீதே இஸ்ரேலிய டாங்கிகள் செல் குண்டுகளை வீசி இருப்பதாக குடியிருப்பாளர்கள் மற்றும் மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இதில் காயமடைந்த பலரும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
‘மக்கள் மீது ஆளில்லா விமானங்கள் சூடு நடத்தின. சில நிமிடங்களுக்கு பின், மக்கள் மீது இஸ்ரேலிய டாங்கிகள் செல் குண்டுகளை வீசின. பெரும் எண்ணிக்கையானவர்கள் உயிர்தியாகம் செய்ததோடு பலரும் காயமடைந்துள்ளனர்’ என்று காசா சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசல் குறிப்பிட்டார்.
நாசர் வைத்தியசாலை கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களால் நிரம்பி இருப்பதாக காசா சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 2 ஆம் திகதி தொடக்கம் காசா பகுதி உதவிகள் செல்லாமல் முற்றாக முடக்கப்பட்டிருப்பதோடு இதனால் அங்கு பாரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு பட்டினி மற்றும் பஞ்சம் குறித்து ஐ.நா அமைப்பு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய உதவி விநியோக இடங்களிலேயே இஸ்ரேலிய படை தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இவ்வாறான தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது.
இந்த உதவி விநியோக இடங்களை இஸ்ரேல் ‘கூட்டுப் படுகொலை தளமாக’ மாற்றி இருப்பதாக யூரோ மெட் மனித உரிமை கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த 2023 ஒக்டோபர் தொடக்கம் நீடிக்கும் போரில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 55,432 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் இடிபாடுகளில்; சிக்கி இருப்பதாக நம்பப்படுகிறது.
உணவுக்கு இருக்கும் கடும் தட்டுப்பாட்டால் பஞ்சத்தால் பலரும் உயிரிழந்திருப்பதோடு மருந்துகளுக்கு உள்ள பற்றாக்குறையால் மேலும் பலர் பலியாகியுள்ளனர்.
No comments:
Post a Comment