பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு : விசாரணைக்கு மூவரடங்கிய குழு நியமனம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 2, 2025

பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு : விசாரணைக்கு மூவரடங்கிய குழு நியமனம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் சுனில் ஷாந்த தெரிவித்தார்.

குறித்த அறிக்கையை விரைவாக கையளிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவர் உள்ளிட்ட தொழில்நுட்ப விஞ்ஞான பீடத்தின் மாணவர்களுக்கு தற்போது Online ஊடாகவே கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்கமைய அந்த மாணவருக்கு பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டிய தேவை இருக்கவில்லை எனவும் உபவேந்தர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் குறித்த மாணவன் கடந்த 26ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளதாகவும் 27ஆம் திகதி பல்கலைக்கழக புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த மாணவனுக்கு பல்கலைக்கழகத்திற்குள் தங்குமிட வசதி வழங்கப்படாவிட்டாலும் அவர் மூன்றாமாண்டு மாணவர்கள் தங்கியிருந்த விடுதியிலேயே தங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனிடையே, குறித்த திடீர் மரணம் பகிடிவதை காரணமாக இடம்பெற்றுள்ளதாக சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவரொருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பகிடிவதை குற்றவியல் குற்றம் என்பதால் அவ்வாறான விடயம் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படுமாயின் அதனுடன் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் மாணவனின் திடீர் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த சம்பவத்தால் தங்களது விரிவுரையாளர்கள் சம்மேளனம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளரும், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க இந்த துயர சம்பவத்திற்கு பகிடிவதையே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் திடீர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதனைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இது ஒரு புதிய சம்பவம் என்ற குற்றச்சாட்டு இருப்பதால், இந்த விடயத்தில் குறுகிய நோக்கங்கள் இல்லாமல் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

மேலும், குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு நாங்கள் முழு ஆதரவையும் வழங்குவோம் என்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் சரித் தில்ஷான் பகிடிவதையால் உயிரிழந்ததாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினருக்கும் எடுக்க கூடிய அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment