(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
காலநிலை சீர்கேட்டினால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. போதுமான அளவு உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. உப்பு தட்டுப்பாட்டுக்கு இவ்வாரத்துடன் தீர்வு எட்டப்படும். அரசியல் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் பிறிதொரு விடயத்தை தேடிக்கொள்ள வேண்டும் என்று வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற நிதி சட்ட கட்டளைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அரிசி விநியோகத்தில் திட்டமிட்ட வகையில் நெருக்கடியை ஏற்படுத்த ஒரு தரப்பினர் மீண்டும் முயற்சிக்கிறார்கள். அரிசி மாபியாக்களை நிச்சயம் இல்லாதொழிப்போம். இம்முறை பெரும்போக விவசாய விளைச்சலின் பின்னர் அரிசி மாபியாக்களுக்கு முடிவுகட்டப்படும்.
உப்பு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் பற்றி பேசப்படுகிறது. கடந்த ஆறு மாத காலப்பகுதிகளில் நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு தற்காலிக தீர்மானமாக உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
நாளொன்றுக்கு உப்பு பயன்பாட்டுக்கான கேள்வி 500 மெற்றிக் தொன்னாக காணப்படுகிறது. உணவு பயன்பாட்டை காட்டிலும் பல்வேறு கைத்தொழில் நடவடிக்கைகளுக்கு உப்பு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே உப்பு உற்பத்தி வழமைக்கு திரும்பும் வரையில் குறுகிய கால அடிப்படையில் உப்பு இறக்குமதிக்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அரச நிறுவனத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்டு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனூடாக உப்பு மாபியா தோற்றம் பெற்றுள்ளதாகவும் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.
இறக்குமதி செய்யப்பட்ட உப்பில் ஒரு தொகை தூய்மையாக்கப்பட்டு சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
போதுமான அளவு உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. உப்பு தட்டுப்பாட்டுக்கு இவ்வாரத்துடன் தீர்வு எட்டப்படும். அரசியல் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் பிறிதொரு விடயத்தை தேடிக்கொள்ள வேண்டும். போலியான விடயங்களை உண்மை போன்று எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுக் கொள்கின்றன என்றார்.
No comments:
Post a Comment