பலஸ்தீனுக்கு ஆதரவான நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் ஒருபோதும் கைது செய்யப்படவில்லை - அமைச்சரவை பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 2, 2025

பலஸ்தீனுக்கு ஆதரவான நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் ஒருபோதும் கைது செய்யப்படவில்லை - அமைச்சரவை பேச்சாளர்

(எம்.மனோசித்ரா)

பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் ஒருபோதும் கைது செய்யப்படவில்லை. மாறாக அதனை அடிப்படையாகக் கொண்டு வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டதன் அடிப்படையிலேயே அண்மையில் கொழும்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (2) இடம்பெற்றது. இதன்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு நிகழ்வுகள் நாட்டில் இடம்பெற்றிருக்கின்றன. தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் ஈடுபடுபவர்கள் ஒருபோதும் கைது செய்யப்படவில்லை. நாமும் பல சந்தர்ப்பங்களில் அவற்றில் பங்கேற்றிருக்கின்றோம்.

எனினும் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டது அவரால் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரில் எழுதப்பட்டிருந்த இரு வசனங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அல்ல. அந்த வசனங்கள் மாத்திரமே பிரச்சினையல்ல. எனினும் சிலர் வன்முறைகளுக்காக அல்லது பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக ஒத்துழைப்புக்களைக் கோரும் வகையில் செயற்படுகின்றனர்.

ஸ்டிக்கரில் குறிப்பிடப்பட்டிருந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் ஊடாக மேலும் பல காரணிகள் வெளிவரும்.

விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே இதிலுள்ள பாரதூர தன்மை குறித்து கருத்து வெளியிட முடியும்.

காசாவில் அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக நாம் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கின்றோம். எமது அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அந்த மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையை நாம் உறுதிப்படுத்துவற்காக நாம் ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார்.

No comments:

Post a Comment