(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அமெரிக்கா விதித்துள்ள 44 வீத தீர்வை வரி அமுல்படுத்தப்பட்டால் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு நாங்கள் முகம்கொடுக்க நேரிடும். அதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண ஒரு நாடாக நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக சர்வ கட்சி மாநாட்டை உடனடியாக கூட்டுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) இடம்பெற்ற பெறுமதி சேர் வரி (திருத்தம்ச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், எமது நாட்டின் ஏற்றுமதித்துறை பாரிய சவால்களை எதிர்நோக்கி வரும் இவ்வேளையில், பாராளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பில் எனது கருத்துக்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்காதிருக்கின்றனர்.
ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதிக்குள் நமது நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 வீத பரஸ்பர வரி விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களை உலகமே அறிந்திருந்தும், நமது அரசு அறியாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயமாகும்.
அமெரிக்காவை முதன்மையாக முன்னிறுத்துவதே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் மேடைகளில் முக்கிய கருப்பொருளாக அமைந்து காணப்பட்டன. அந்த வாக்குறுதியின் பிரகாரம் இந்த வரிகளை விதித்துள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப் தனது கொள்கை அறிக்கையில் இதனை குறிப்பிட்டிருந்தார். நமது அரசாங்கமானது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை மறந்தாலும், டொனால்ட் டிரம்ப் தனது விஞ்ஞாபனத்தை அமுலுக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த வரிகளினால் எமது நாட்டுக்கு பாரிய பாதிப்புகள் ஏற்படும் என பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தூதுக்குழுவை அனுப்பியுள்ளதாக பதிலளித்தனர்.
இன்று இது தொடர்பான கேள்விகளை எழுப்பியபோது, அரசாங்கத்திடம் பதில் இல்லை. பின்பற்ற வேண்டிய மூலோபாயங்கள் குறித்து யோசனைகளையும் நான் இன்று முன்வைத்தேன். அரசாங்கம் அன்று போலவே தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தி வருகிறது.
44 வீத பரஸ்பர வரி விதிப்பை விட அரசாங்கத்திற்கு நிலையியற் கட்டளை பெரியதாகிப்போயுள்ளது. இந்த நிலையியற் கட்டளை புத்தகத்தைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சியினரை வலுக்கட்டாயமாக வாயடைக்க முயற்சிக்கின்றனர்.
நமது நாட்டின் மொத்த ஏற்றுமதி 12.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் பெரும் பங்கு அதாவது 22.8 வீத ஏற்றுமதிகள் ஐக்கிய அமெரிக்காவிற்கே செல்கின்றன. இது 2911 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையாகும்.
இந்த ஏற்றுமதியில், ஆடைத் துறை மட்டும் 1885 பில்லியன் மதிப்பைக் கொண்டுள்ளது. இது 64 வீதமாகும். இதற்கிடையில், இறப்பர் அமெரிக்க டொலர் 328 மில்லியனையும், தேங்காய் அமெரிக்க டொலர் 73 மில்லியனையும், எக்டிவேடட் கார்பன் அமெரிக்க டொலர் 49 மில்லியனையும், தேயிலை அமெரிக்க டொலர் 48 மில்லியனையும், இரும்பு அமெரிக்க டொலர் 48 மில்லியனையும் கொண்டுள்ளதோடு, ஆடை ஏற்றுமதியில் 38-40வீம் அமெரிக்காவிற்கே ஏற்றுமதியாகின்றன.
இந்தத் தரவுகள் குறித்து அரசாங்கத்திற்கு புரிதல் காணப்படுகின்றதா என்பதில் பிரச்சினை காணப்படுகிறது.
மேலும் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்கு அமெரிக்க வர்த்தகக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தும் சந்தர்ப்பம் காணப்படுகிறது. இந்த அதிகாரம் அமெரிக்க அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ளது. சட்டங்களை உருவாக்குவதற்கும் வர்த்தக உடன்படிக்கைகளை அங்கீகரிப்பதற்கும் கூட அதிகாரங்கள் இவற்றுக்கு காணப்படுகின்றன.
ஒருதலைப்பட்சமாக வரி விதிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்பட்டாலும், இந்த சபைகளினது உறுப்பினர்களுக்கு இதில் செல்வாக்கு செலுத்தக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதால் அரசாங்கம் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். செனட் சபையிலும், பிரதிநிதிகள் சபையிலும் இலங்கையைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருக்கிறார்களா என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதனால் தூதுக்குழுவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அனுப்பாது, பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் விதமாக அனுப்ப வேண்டும்.
தற்போது, செனட்டில் உள்ள குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ஒன்றிணைந்து, இந்த வர்த்தகக் கொள்கை தொடர்பாக புதிய சட்டமொன்றை கொண்டுவர தயாராகி வருகின்றன. இதன் மூலம், ஜனாதிபதி தன்னிச்சையாக விதிக்க வரும் வரிகளை காங்கிரஸில் அனுமதியைப் பெற வேண்டும். எனவே இவ்விரு சபைகளினது பிரதிநிதிகளுடனும் எமது நாட்டில் இருந்து செல்லும் தூதுக்குழுவினர் கலந்துரையாட வேண்டும்.
ஒரு நாடாக, நாம் அமெரிக்கப் பிரதிநிதிகளை இராஜதந்திர ரீதியாக நேரடியாக சந்திக்க வேண்டும். ஜனாதிபதி ட்ரம்புக்கு கடிதம் அனுப்பினால் மட்டும் போதாது. 44 வீத தீர்வை வரி விதிப்பு நமது நாட்டின் ஏற்றுமதித்துறைக்கு விழுந்த பெரும் அடியாகும். சகல தொழிற்துறைக்கும் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வரிகளால் தொழில்கள் வீழ்ச்சியடையும். வேலைகள் இழக்கப்படும். வருமானம் குறையும். பொருளாதாரம் வீழ்ச்சியடையும். இதனால் 2028 இல் கடனைத் திருப்பிச் செலுத்துவது கூட கடினமாக மாறும்.
சர்வதேச நாணய நிதியம் 2033 ஆம் ஆண்டிலிருந்து கடனைத் திருப்பிச் செலுத்த முன்வந்த போதிலும், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அவதானத்தைப் பெறுவதற்கு முந்தைய அரசாங்கம் 2028 இல் இருந்து திருப்பிச் செலுத்தும் விதமாக கால அவகாசத்தைக் குறைத்தது. இதற்கு துரித பொருளாதார வளர்ச்சி விகிதம் காணப்பட வேண்டும்.
எனவே ஆடைத்துறை மற்றும் இதர ஏற்றுமதி துறைகளுக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறு இந்தியப் பிரதமருடனான சந்திப்பின்போது நான் யோசனை முன்வைத்தேன். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, இனம், மதம், சாதி, வர்க்கம், அந்தஸ்து என்ற வேறுபாடின்றி இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
அதற்காக சகல கட்சிகளையும் கூட்டி பொதுவான வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டும். கடுமையான பொருளாதாரப் பேரழி ஏற்பட முன்னதாக நாம் ஒற்றுமையாகவும், பொதுவான ஒருமித்த நிலைப்பாட்டின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment