வீதிக்கு வரும் வரை எங்களால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது : அரசாங்கத்தால் நிர்வகிக்க முடியாவிட்டால் பொறுப்பை எங்களிடம் வழங்குங்கள் - சாணக்கியன் - News View

About Us

About Us

Breaking

Monday, March 3, 2025

வீதிக்கு வரும் வரை எங்களால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது : அரசாங்கத்தால் நிர்வகிக்க முடியாவிட்டால் பொறுப்பை எங்களிடம் வழங்குங்கள் - சாணக்கியன்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கிழக்கு மாகாணத்தில் பிரச்சினைகள் வீதிக்கு வரும் வரையில் எங்களால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் கிழக்கு மாகாணத்தை நிர்வகிக்க முடியாவிட்டால் அந்தப் பொறுப்பை எங்களிடமாவது வழங்குங்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் வலுசக்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, சூரிய மின்சக்தி திட்டத்திற்கு காணி ஒதுக்கும்போது மிகவும் கவனமாக அந்தந்த கிராமங்களில் உள்ள நிலத்தின் எண்ணிக்கையை பார்த்து அவற்றை வழங்க வேண்டும்.

வவுணதீவு ஈச்சந்தீவு பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் அங்கு நிலமே இல்லை. இதனால் சூரிய மின்சக்திக்காக காணிகளை ஒதுக்கும்போது அந்த பிரதேசத்தின் நன்மையை பாதுகாப்பதும் அந்த பிரதேச அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்.

மாவட்ட அபிவிருத்தி குழுவில் கடந்த டிசம்பர் மாதத்தில் எடுத்த எந்தத் தீர்மானமும் இதுவரையில் நடைமுறைக்கு வரவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வு மேற்கொள்ளப்படக்கூடாது என்று தீர்மானித்தபோதும் மண் அகழ்வு இன்றும் தொடர்கிறது.

அதேபோன்று மீன்பிடி பிரச்சினை தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்பட்டது அதுவும் நடக்கவில்லை. எமது மாவட்ட மக்களின் பிரச்சினைகளை வீதிக்கு வருவதற்கு இடமளிக்கக்கூடாது. ஆரையம்பதியில் பாரிய போராட்டமொன்று நடைபெறுகிறது. வாள் வெட்டு குழுக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தின்போது ஜனாதிபதி பதிலளித்து உரையாற்றும்போது பாதாள உலக கும்பலின் செயற்பாடுகள் மட்டக்களப்பு, யாழ்ப்பாணத்தில் நடக்கலாம் என்று குறிப்பிட்டார். இந்நிலையில் ஆரையம்பதியில் வாள் வெட்டு குழுக்களின் செயற்பாட்டால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.

அந்த வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் கிழக்கு மாகாணத்தில் நிர்வாகம் செய்ய முடியாவிட்டால் எமது மூத்த அரசியல்வாதிகள் இருக்கின்றனர். ஹிஸ்புல்லா இருக்கின்றார். நான் மூத்த அரசியல்வாதியாக இல்லாவிட்டாலும் 15 வருடங்களாக அரசியலில் ஈடுபடுகின்றேன். உங்களால் கிழக்கு மாகாணத்தின் எதிர்காலத்தை பார்க்க முடியாவிட்டால் எங்களிடமாவது தாருங்கள்.

இந்த மாவட்டத்தில் பிரச்சினைகள் வீதிக்கு வரும் வரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு எங்களால் இருக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment