மின்சார சட்ட திருத்தம் தொடர்பில் நிதி, மின்சக்தி அமைச்சுகளுக்குள் பரஸ்பர முரண்பாடு - அஜித் பி பெரேரா - News View

About Us

About Us

Breaking

Monday, March 3, 2025

மின்சார சட்ட திருத்தம் தொடர்பில் நிதி, மின்சக்தி அமைச்சுகளுக்குள் பரஸ்பர முரண்பாடு - அஜித் பி பெரேரா

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மின்சார சட்ட திருத்தம் தொடர்பில் மின்சக்தி அமைச்சினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டிருக்கும் திருத்தங்களுக்கும் நிதி அமைச்சினால் முன்வைக்கப்பட்டிருக்கும் அறிக்கைக்கும் இடையில் பாரிய முரண்பாடு இருந்து வருகிறது. வலுசக்தி தொடர்பில் அரசாங்கத்துக்குள் இருந்துவரும் இந்த பரஸ்பர முரண்பாட்டை விரைவாக தீ்ர்த்துக் கொள்ளாவிட்டால் அது மின்சக்தி அபிவிருத்திக்கு பாரிய பிரச்சினையாக அமைந்துவிடும் என அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (03) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வலுசக்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்துக்கு பிரதான தடையாக இருந்துவரும் விடயம்தான் மின்சார கட்டண அதிகரிப்பு மற்றும் மின்சாரத்தின் நம்பகத்தன்மை, ஆராேக்கியத்தன்மை.

இந்த இரண்டு விடயங்கள் தொடர்பான பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவாக தீர்வு காண முடியாமல்பாேனால் நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பும் சவாலை எங்களால் வெற்றி கொள்ள முடியாமல்போகும்.

அதனால் நாட்டின் சலுசக்தி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி தெளிவான கொள்கையில் இருக்கிறது. அது தொடர்பில் எமது நிலைப்பாட்டை நாங்கள் நாட்டுக்கு அறிவித்திருக்கிறோம்.

2024 இல் இந்த பாராளுமன்றம் புதிய மின்சார சட்டம் ஒன்றை அனுமதித்துக் கொண்டது. குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டபோது நாங்கள் அது தொடர்பில் தெளிவுபடுத்திக் கொள்ள நீதிமன்றத்தை நாடினோம்.

நீதிமன்றத்தில் நாங்கள் தெரிவித்த கருத்துக்களை கருத்தில் கொண்டு, நீதிமன்ற வரையறைக்குள் குறித்த சட்டமூலத்தில் பாரிய திருத்தங்களை மேற்கொண்டது.

அதனால் 2024 இல் அனுமதித்துக் கொண்ட அந்த சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தி அதில் பல திருத்தங்களை அதற்கு பரிந்துரைத்தபோதும் அந்த திருத்தங்களை அப்போதைய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை.

அதனால் புதிய மின்சார சட்டம் ஒன்றை கொண்டுவருவதாக தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் தெரிவித்துவந்தது. ஆனால் பின்னர் இருக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதாக அரசாங்கம் தெரிவித்திருந்து.

அதனை துறைசார்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடி மேற்கொள்வதாக அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் துரதிஷ்டவசமாக, இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு என வலுசக்தி அமைச்சு அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ள எண்ணக்கருக்களை பார்க்கும்போது அது நாட்டின் வலுசக்தி யோசனைகளை தலைகீழாக மாற்றும் வகையில் அமைந்துள்ளது.

குறிப்பாக சமர்பித்திருக்கும் யோசனைகள் மூலம் நாட்டின் வலுசக்தியின் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீகள் வரையறுக்கப்படுகின்றன.

மின்சாக்தி அமைச்சர் கடந்த ஜனவரி 23ஆம் திகதி இது தொடர்பில் அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்துடன், அவரது எண்ணக்கரு பத்திரம் ஒன்றையும் அதனுடன் இணைத்துள்ளது.

அமைச்சரவைக்கு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் கடந்த மாதம் 3ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் கையெழுத்துடன் நிதி அமைச்சின் மேற்பார்வையுடன் அறிக்கை ஒன்றும் இணைக்கப்பட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், மின்சார அமைச்சரால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் எண்ணக்கருக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட அறிக்கையையே ஜனாதிபதி அனுப்பி இருக்கிறார்.

அமைச்சரின் எண்ணக்கரு அறிக்கை, இந்த நாட்டின் மின்சக்தி துறையை மீண்டும் பழைய நிலைமைக்கு மாற்றக்கூடியது என்றும் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டார்களின் முதலீடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

அதனால் வலுசக்தி துறையின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளே பாரிய முரண்பாடு இருந்து வருகிறது. மின்சார சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு மின்சார அமைச்சினால் முன்வைக்கப்பட்டிருக்கும் எண்ணக்கருக்கள் பத்திரமும் நிதி அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்திருக்கும் எண்ணக்கருக்கள் பத்திரத்துக்கும் பாரிய முரண்பாடு இருந்து வருகிறது. இது பாரிய பிரச்சினையாகும்.

இந்த பரஸ்பர முரண்பாடுகளுடன் அரசாங்கம் செயற்படுவது நாட்டுக்கும் நல்லதில்லை, அரசாங்கத்துக்கும் நல்லதில்லை. அதேநேரம் இந்த முரண்பாடான நிலை காரணமாக வலுசக்தி துறையின் அபிவிருத்திக்கு பாரிய பிரச்சினை ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அதனால் அரசாங்கத்துக்குள் இருக்கும் இந்த முரண்பாடன நிலை தொடர்பில் விரைவாக தீர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது பாரிய பிரச்சினையாக அமையும் என்றார்.

No comments:

Post a Comment