அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்கத் தயார் : கூரை பழுதடைந்தால் வீட்டை மாற்றுவதில்லை வீட்டையே திருத்த வேண்டும் - ஜீவன் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Friday, March 14, 2025

அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்கத் தயார் : கூரை பழுதடைந்தால் வீட்டை மாற்றுவதில்லை வீட்டையே திருத்த வேண்டும் - ஜீவன் தொண்டமான்

மலையக பெருந்தோட்ட மக்களின் நலன்கருதி அரசாங்கம் மேற்கொள்ளும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட எம்.பி ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மலையக அரசியல்வாதிகள் மன்னிப்புக்கோர வேண்டும் என்று ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த அவர், மலையகத் தலைவர்கள் மலையகத்துக்கு எதனையும் செய்யவில்லை என்று குறைகூறுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ”நோர்வூட் பிரதேச செயலகத்தில் காணப்படும் வளப் பற்றாக்குறையால்தான் அதனை ஹட்டன் பகுதிக்கு மாற்ற தீர்மானித்துள்ளதாக ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி குறிப்பிடுகிறார். 

வீட்டின் கூரை பழுதடைந்தால் வீட்டை மாற்றுவதில்லை. வீட்டையே திருத்த வேண்டும். அதுபோன்று நோர்வூட் பிரதேச செயலகத்தில் வளப் பற்றாக்குறை காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்ய நிதி ஒதுக்க வேண்டுமே தவிர அதனை விடுத்து ஹட்டன் பகுதிக்கு அந்த பிரதேச செயலகத்தை கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். 

நோர்வூட் பிரதேச செயலகத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிராக அப்பிரதேச மக்கள் கையெழுத்து வைத்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆகவே, மக்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்து செயற்படுவது அவசியம்.

1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலையக மக்கள் இந்த நாட்டில் நாடற்றவர்களாக இருந்தார்கள். 2009ஆம் ஆண்டுக்கு பின்னரே முழுமையாக குடியுரிமை கிடைக்கப் பெற்றது. 

வீடமைப்பு உட்பட ஏனைய அடிப்படைத் தேவைகளை பெற்றுக் கொள்ள மலையக மக்கள் இந்திய அரசாங்கத்திடம் பிச்சை கேட்கவில்லை. மலையக மக்களின் விவகாரத்தில் இந்திய அரசாங்கத்துக்கும் பொறுப்புண்டு. ஒரு காலத்தில் இந்திய அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் மலையக மக்களை நாடு கடத்தியது என்பதே உண்மை.

பெருந்தோட்ட மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி பாரிய போராட்டத்துக்கு மத்தியில் உருவாக்கப்பட்டது. நாம் அனைவரும் பின்தங்கிய மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டிருந்தால் எமது மக்களுக்கு அபிவிருத்திகளும் உரிமைகளும் கிடைப்பது தொடர்ந்து போராட்டத்துக்குரியதாகவே அமையும் என்பதை மறந்து விடக்கூடாது.

மலைய மக்கள் மத்தியில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இருக்கக்கூடாது என்பதற்காகவே நான் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேடையில் ஏறினேன். மலையக சிரேஷ்ட அரசியல் தலைமைகளான மனோ கணேசன், ராதாகிருஷ்ணன், திகாம்பரம் ஆகியோருடன் நான் இணக்கமாக செயற்படுகிறேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment