எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கும் 3 வீத தரகுப்பணத்தை இரத்து செய்தது தவறு - ஹிஸ்புல்லாஹ் - News View

About Us

About Us

Breaking

Monday, March 3, 2025

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கும் 3 வீத தரகுப்பணத்தை இரத்து செய்தது தவறு - ஹிஸ்புல்லாஹ்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் ஊழியர்கள் சம்பள உயர்வுகளை கோரும் சந்தர்ப்பத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கும் 3 வீத தரகுப்பணத்தை இரத்துச் செய்திருப்பது பிழையான நடவடிக்கையாகும் என எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (3) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் வலுசக்தி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், மின்சக்தி அமைச்சு எப்போதும் நாட்டின் பொருளாதாரத்தை கருத்திற் கொண்டும் மக்களின் வாழ்க்கை தரத்தை கருத்திற் கொண்டும் அதன் விலைகளை மக்களுக்கு நிவாரணமாக மேற்கொள்ள வேண்டுமே தவிர லாபம் நோக்கில் செயற்படக்கூடாது. இது தொடர்பில் பெற்றோலிய அமைச்சு மக்களின் நிலைமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றே நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

இந்நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தங்களின் எரிபாருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கி வந்த நூற்றுக்கு 3 வீத தரகுப்பணத்தை நிறுத்திக் கொண்டதால், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றன.

பெற்றோலிய கூட்டுத்தானம் நீண்ட காலமாக இந்த 3 வீத தரகுப்பணத்தை அவர்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கி வருகிறது. அந்த 3 வீத தரகுப்பணத்திலேயே எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனைத்து செலவினங்களும் அடங்குகின்றன.

குறிப்பாக அவர்கள் கொழும்பில் இருந்து எரிபொருளை எடுத்துச் சென்று நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் விநியோகிப்பதுடன், அவர்களுக்கு கீழ் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் ஏனைய அனைத்து செலவினங்களையும் இந்த 3 வீத தரகுப் பணத்திலேயே மேற்கொள்ள வேண்டி இருக்கின்றனர்.

இந்த 3 வீத தரகுப்பணத்தை சிபெட்கோ நிறுவனம் மாத்திமல்லாது சீனா, அமெரிக்கா, அவுஸ்திரேலிய நிறுவனங்களும் வழங்குகின்றன. இவ்வாறான நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் திடீரேன இவ்வாறானதொரு முடிவு எடுத்தமை ஒரு தவறான தீர்மானமாகும். அவர்களுடன் கலந்துரையாடி இது தொடர்பில் ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்க வேண்டும்.

நாட்டில் தற்போதைய பொருளாதார நிலையில் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு ஏனைய கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலையில், இந்த 3 வீத தரகுப்பணத்தை நிறுத்துவதைவிட அதிகரிப்பது தொடர்பாகவே அரசாங்கம் சிந்தித்திருக்க வேண்டும் என்றே எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எம்மிடம் தெரிவித்தனர். அதனால் அரசாங்கம் இது தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment