(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
குடிநீர் சுத்திகரிப்புக்காக இறக்குமதி செய்யப்பட்ட குரோமியம் மூலப்பொருளின் அளவு 14 ஆக காணப்படுகிறது. இதனை பயன்படுத்தினால் புற்றுநோய், நீரிழிவு, தோல் நோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே குழாய் நீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அரசாங்கம் இவ்விடயத்தின் உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டு மக்களின் உயிரை பலி கொடுக்கும் வகையில் இடம்பெறவுள்ள செயற்பாடு தொடர்பில் சபைக்கு குறிப்பிடுகிறேன். நாட்டு மக்களில் பெரும்பாலானோர் குழாய் நீரையே பிரதான குடிநீராக பயன்படுத்துகின்றனர். இரத்மலானை, காலி மற்றும் அம்பத்தளை ஆகிய பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
நீரை சுத்திகரிப்பு செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள், பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் அளவு தொடர்பில் இலங்கை தர நிர்ணய சபை, சுகாதார அமைச்சு மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஒன்றிணைந்து வழிகாட்டல் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. நீரின் காரத்தன்மை (ph) அளவு, பயன்படுத்தப்படும் குரோமியம் மூலப் பொருளின் அளவு தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் குரோமியம் மூலப் பொருளை இறக்குமதி செய்யும்போது இலங்கையின் துறைசார் நிபுணர்கள் குறித்த நிறுவனத்தில் நாட்டுக்கு நேரடியாக சென்று அங்கு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மூலப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர் அவை இலங்கையின் ஆய்வு கூடங்களில் பரிசோதிக்கப்பட வேண்டும். இதற்கமைய குரோமியம் மூலப் பொருளின் கூறுகளின் அளவு 10 வீதமாக காணப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குரோமிய கூறுகளின் அளவு நீரில் அதிகரிக்கும்போது புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் 27 கொள்கலன்களில் 550 மெற்றிக் தொன் குரோமியம் மூலப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவற்றை இலங்கையின் ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்தபோது அதன் மூலக்கூறின் அளவு 14 ஆக காணப்பட்டுள்ளது.
குரோமியம் மூலப் பொருளை கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டுக்கு சென்ற தரப்பினர் இதனை அறியவில்லையா? பின்னர் இந்த மூலப் பொருட்கள் தனியார் ஆய்வு கூடத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அங்கும் மூலக்கூற்றின் அளவு 14 ஆக காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இலங்கை தர நிர்ணய சபைக்கு அறிவுறுத்தப்பட்டு, தரத்தை மாற்றியமைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் மோசமானதொரு செயற்பாடாகும். இந்த முறையற்ற செயற்பாட்டுக்கு அரசாங்கம் எவ்வாறு இடமளித்துள்ளது.
குடிநீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பான ஆவணங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். அரசாங்கம் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் உண்மையை பகிரங்கப்படுத்துங்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்த வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, இவ்விடயம் தொடர்பில் குறித்த நிறுவனங்களிடம் வினவி சபைக்கு அறிவிப்பதாக குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment