(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு மக்கள் சேவைக்காக அன்றி அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவே வழங்கப்படுகின்றது. ஆகவே இந்த நிதியை கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும். அரசியல்வாதிகள் ஓய்வூதியம் பெறுவதை மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆகவே உடன் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்ய வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நீக்குதல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, மக்கள் மத்தியில் பெரும் விரக்தி ஏற்பட்டுள்ள விடயமொன்றை குறிப்பிடுகின்றேன். பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிக் காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் ஓய்வூதியம் பெறுவதை மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்
ஆகவே உடனடியாக அமுலுக்குவரும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்க வேண்டுமென வலியுறுத்துகின்றேன்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் மக்கள் சேவைக்காக அன்றி அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக வழங்கப்படுகின்றது என்ற விமர்சனங்கள் உள்ளன. இதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்காக சேவை செய்பவர்களாக இருக்க வேண்டும்.
அந்த நிதியை சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சேவைகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்று கேட்கின்றேன். இதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான மக்கள் நம்பிக்கை குறைவடைந்துள்ளது. இந்த நம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலேயே இந்த தீர்மானத்தை கொண்டுவருகின்றேன்.
மக்களின் எண்ணங்களின் வெளிப்பாடாகவே நாங்கள் இருக்கின்றோம். இதன்படி நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கோரிக்கையை செயற்படுத்த வேண்டும்.
215 பேர் ஓய்வூதியத்தை பாராளுமன்றத்தின் ஊடாக பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் நாட்டுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓய்வூதியத்தை பெறுவது போன்றே காண்பிக்கப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த யோசனையை முன்வைக்க வேண்டியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குங்கள். அப்போது அவர்கள் மக்களுக்கான சேவையாளர்களாக இருப்பர்.
மலேசியா, இந்தியா போன்ற நாடுகளை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இதனூடாக புதிய கலாச்சாரத்தை உருவாக்கி பாராளுமன்றத்தை நம்பிக்கையுடனான கௌரவான இடமாக மாற்ற வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment