ரணில், சஜித் இணைவது காலத்தின் கட்டாயம் : முழு மனதோடு வரவேற்போம் என்கிறார் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2025

ரணில், சஜித் இணைவது காலத்தின் கட்டாயம் : முழு மனதோடு வரவேற்போம் என்கிறார் ஹக்கீம்

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவது காலத்தின் கட்டாயமாக உள்ள நிலையில், இரு தரப்பும் இணையும் பட்சத்தில் நாம் முழு மனதோடு வரவேற்போம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ரணில்,சஜித் ஆகியோரை இணைப்பது குறித்து தீவிரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும், எமது கூட்டணியின் பிரதான கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைப்பதற்கான நடவடிக்கைகளை நானும், மனோ கணேசனும் ஏலவே முன்னெடுத்திருந்தோம். இதற்காக அவர்களிடத்தில் பல்வேறு சந்திப்புக்களை நடத்தியிருந்ததோடு இணைந்து செயற்பட வேண்டியமைக்கான காரணத்தினையும் எடுத்துக் கூறியிருந்தோம்.

எனினும் கடந்த காலங்களில் இரு தலைவர்கள் மத்தியிலும் காணப்பட்ட தலைமைத்துவம் உள்ளிட்ட சில முக்கிய விடயங்களில் விட்டுக் கொடுப்பற்ற நிலைமையால் அந்த முயற்சிகள் கைகூட முடியாது போயிருந்தது.

ஆனால், தற்போது, ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களில் கிடைத்த பெறுபேறுகளை அடுத்து இரு தலைவர்களுக்கும் ஏற்பட்டுள்ள ஞானோதயம் அவர்கள் இணைந்து செயற்படுவதற்கான கட்டாயத்தை உணர்த்தியுள்ளது.

ஆகவே, இரு தரப்பினரும் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுவதற்கு இரு தரப்பு அரசியல் கட்சிகளினதும் உயர் மட்டக் குழுக்களை நியமித்துள்ளன.

ஆதனடிப்படையில் எதிர்காலத்தில் பேச்சுக்களை முன்னெடுத்து இரு தரப்பினரும் இணைந்து செயற்படுகின்றபோது அதனை நாம் முழுமையாக வரவேற்பதோடு அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம்.

அடுத்து வருகின்ற தேர்தல்களை கையாள்வதற்கு இவ்விரு கட்சிகளும் இணைந்து வியூகத்துடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பது எமது நிலைப்பாடக உள்ளது என்றார்.

No comments:

Post a Comment