(எம்.வை.எம்.சியாம்)
500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட கல்கமுவ நீர்ப்பாசன கால்வாய் திட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனவே இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். நிச்சயம் அது தொடர்பில் நாம் நடவடிக்கை எடுப்போம் என விவசாயம் மற்றும் கால்நடை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
போகஸ்வெவ பகுதியிலிருந்து சியம்பலாண்டுவ ஓயாவை கடந்து மஹகல்கமுவ ஏரிக்கு நீரைக் கொண்டு வருவதற்காக 14 கிலோ மீட்டர் நீளமான நீர்ப்பாசன கால்வாய் ஒன்று உருவாக்கும் திட்டத்துக்கு 2014 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் இந்த திட்டம் இன்று வரையில் முழுமைப் படுத்தப்படவில்லை.
அத்துடன் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய பிரதி அமைச்சர் வியாழக்கிழமை (4) அங்கு சென்றிருந்தார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விடயம் தொடர்பில் கேட்டறிந்த பிரதி அமைச்சர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், மஹகல்கமுவ ஏரிக்கு நீரைக் கொண்டு வருவதற்காக 14 கிலோ மீட்டர் நீளமான நீர்ப்பாசன கால்வாய் திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இது சிறந்ததொரு வேலைத்திட்டமாகும்.
கடந்த காலங்களில் இந்த வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த நிதியில் பகுதியளவு இந்த திட்டத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சொற்ப அளவு நிதியே எஞ்சியுள்ளது.
எனினும் இந்த நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். நில ஆக்கிரமிப்புகளும் இடம்பெற்றுள்ளதாகவும் எமக்கு அறியகிடைத்துள்ளது. இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதால் மூன்று குளங்களை அண்டி விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் எமது அரசாங்கத்தினாலும் புதிதாக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கி இந்த திட்டத்தை மீள ஆரம்பிக்க வேண்டியுள்ளது. கடந்த 10 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் பயனற்ற ஒன்றாக மாறியுள்ளது.
எனவே இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனை சரி செய்ய வேண்டும். நிச்சயம் அது தொடர்பில் நாம் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment