2026ஆம் ஆண்டு மறுமலர்ச்சியின் தைப் பொங்கலாக கொண்டாடுவோம் : நீங்கள் வைத்த நம்பிக்கையை ஒருபோதும் இழக்க இடமளிக்கமாட்டோம் - அமைச்சர் சரோஜா தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, January 18, 2025

2026ஆம் ஆண்டு மறுமலர்ச்சியின் தைப் பொங்கலாக கொண்டாடுவோம் : நீங்கள் வைத்த நம்பிக்கையை ஒருபோதும் இழக்க இடமளிக்கமாட்டோம் - அமைச்சர் சரோஜா தெரிவிப்பு

2026ஆம் ஆண்டு தைப் பொங்கலை மறுமலர்ச்சியின் தைப் பொங்கலாக நாம் அனைவரும் கொண்டாடுவோம். அதற்காக அனைத்து விதமான வேலைத்திட்டங்களையும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தேசிய மக்கள் சக்தி மீது வைத்த நம்பிக்கை வீண்போகாதென மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

தெல்லிப்பழையில் நடைபெற்ற தேசிய தைப் பொங்கல் விழா தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பின்னர், யூனியன் கல்லுரியில் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன. அங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டை அநுர அரசாங்கம் பொறுப்பேற்றால் எரிபொருளுக்காக, மின்சாரத்துக்காக, எரிவாயுவுக்காக வரிசையில் நிற்க வேண்டும் என்றார்கள். முதலிட்டாளர்கள் வெளியேறுவார்கள் என்றும் ஊடகங்கள் ஊடாக வதந்திகள் தீவிரமாக பரப்பப்பட்டன. ஆனால், அவை அனைத்தையும் பெய்யாக்கி இன நல்லுறவுக்கான, பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இன நல்லிணக்கத்துக்காக அயல் நாடுகளுடன் உறவை வளர்த்து வருகின்றோம். வீண் செலவுகளை குறைத்து வருகின்றோம். எமது ஆட்சிக் காலத்தில் எமது நாட்டை பொருளாதாரத்தினால் கட்டியெழுப்புவோம். வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவரவுள்ளோம். தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவோம்.

கிராமத்தில் உள்ள வறுமையை இல்லாதொழிப்போம், பெண்களை முன்னேற்றுவோம், பெண்கள் சிறுவர்களை பாதுகாப்போம், பலப்படுத்துவோம் அனைவருக்குமான வேலைத்திட்டங்களை முன்னேடுத்து அதற்கான திட்டங்களை தயாரித்து வருகின்றோம்.

நாங்கள் அனைவரும் அணிதிரள வேண்டும். நாங்கள் கூறிய விடயங்களை நிறைவேற்றுவதற்கு எங்கள் கட்சி மீது நம்பிக்கை வையுங்கள். நீங்கள் வைத்த நம்பிக்கையை ஒருபோதும் இழப்பதற்கு இடமளிக்கமாட்டோம் என்ற உறுதிப்பாட்டை வழங்குகின்றேன்.

தை பிறந்தால் வழி பிறக்கும். இதுவரை காலமும் பிறந்த தையை விட தற்போது பிறந்துள்ள தை மாதம் மறுமலர்ச்சியின் தை மாதமாகும். இதற்கு பிறகு சுபீட்சமிக்க தன்னிறைவு பெற்ற தன்மானமுள்ள இலங்கையராக வாழ்கின்ற நிலைமையே உருவாகப்போகிறது என்றார்.

No comments:

Post a Comment