(இராஜதுரை ஹஷான்)
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான பெரும்போக விவசாயத்தின் நெற் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோ கிராம் நெல்லுக்கான உத்தரவாத விலையை 130 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை நிர்ணயிக்குமாறு விவசாயிகளின் ஒன்றியத்தினர் கமத்தொழில் அமைச்சிடம் யோசனை முன்வைத்துள்ளனர்.
விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைய நெல்லுக்கான உத்தரவாத விலையை 150 ரூபாவாக நிர்ணயித்தால் விவசாயிகள் பயனடைவார்கள். ஆனால் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள். 150 ரூபாவாக நிர்ணயித்தால் ஒரு கிலோ கிராம் நாடு அரிசியை 330 ரூபாவுக்கு விற்பனை செய்ய நேரிடும் என கமத்தொழில் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.யு.குணரத்ன தெரிவித்தார்.
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு குறுகிய கால அடிப்படையில் தீர்வு காணும் வகையில் தனியார் துறையினர் அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட காலவகாசம் கடந்த 10 ஆம் திகதியுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்த நிலையில் 167,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அரிசி இறக்குமதிக்கு இனி அனுமதி வழங்கப்படமாட்டாது என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
167,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையிலும் ஒரு சில பகுதிகளில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதை அவதானிக்க முடிகிறது. பச்சையரிசி தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.
இதேவேளை சந்தையில் நிலவும் பச்சையரிசி தட்டுப்பாடு தொடர்பில் வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் 20 கிலோ கிராம் பச்சையரிசினை அனைத்து மாகாணங்களுக்கும் விநியோகித்ததால்தான் சந்தையில் இன்று பச்சையரிசிக்கான தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. பச்சையரிசி இறக்குமதி தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான பெரும்போக விவசாயத்தில் நெற் பயிர்ச் செய்கையின் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் விவசாய அமைப்பின் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் விவசாயத்துறை, கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது ஒரு கிலோ கிராம் நெல்லுக்கான உத்தரவாத விலையை 130 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை நிர்ணயிக்குமாறு யோசனை முன்வைத்துள்ளனர்.
இந்த யோசனை தொடர்பில் கமத்தொழில் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.யூ.குணரத்ன குறிப்பிடுகையில், நெல்லுக்கான உத்தரவாத விலையை 150 ரூபாவாக நிர்ணயித்தால் 18 இலட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் ஆனால் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள்.
நெல்லுக்கான உத்தரவாத விலையை 150 ரூபாவாக நிர்ணயித்தால் ஒரு கிலோ கிராம் நாடு அரிசியின் விலை 330 ரூபாவாகவும், சம்பா அரிசியின் விலை 360 ரூபாவாகவும், கீரி சம்பா அரிசியின் விலை 420 ரூபா வரை உயர்வடையும். அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தற்போது விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வர்த்தகர்கள் அவற்றை பின்பற்றுவதில்லை.
நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்காமல் விவசாயிகளுக்கு உரம் மற்றும் கிருமிநாசினிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான நிவாரணத்தை வழங்கி, ஒரு கிலோ கிராம் நெல்லுக்கான உத்தரவாத விலையை 100 முதல் 105 ரூபாய் வரை நிர்ணயித்தால் அரிசியின் விலையை 180 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை நிர்ணயிக்க முடியும். அப்போதுதான் விவசாயிகளும், நுகர்வோரும் பயனடைவார்கள் என்றார்.
No comments:
Post a Comment