(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)
குறை நிரப்பு பிரேரணை நிறைவேற்றப்படாத நிலையில்தான் இடைக்கால வாக்கு கணக்கு பதிவை சமர்ப்பிக்க முடியும். பெரும்பான்மை உள்ளதால் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுகிறது. எதிர்த்தரப்பில் 66 உறுப்பினர்கள் உள்ளார்கள். ஆகவே குறைபாடுகளை சுட்டிக்காட்ட இடமளியுங்கள் என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்ற அனுமதி கோரினார்.
இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல, நீங்கள் (தயாசிறி ஜயசேகரவை நோக்கி) முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினை இன்று காலை 09.25 மணியளவில் கிடைக்கப் பெற்றது. அத்துடன் பத்திரத்தில் திகதியும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே இவ்விடயம் தொடர்பில் உங்களிடம் கலந்துரையாட தீர்மானித்திருந்தேன் என்றார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் அதாவது 09.30 மணிக்கு முன்னர் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைக்கலாம்.
இடைக்கால கணக்கறிக்கையை முன்வைக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க அரச நிதி முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் 23 ஆம் பிரிவில் 'நடப்பு ஆண்டின் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எதிர்வரும் காலப்பகுதிக்கான குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றப்படாவிடின், நிதியமைச்சர் அரச நிர்வாகம் மற்றும் இதர காரணிகளை கருத்திற் கொண்டு நிதி ஒதுக்கீடு செய்ய இடைக்கால கணக்கறிக்கையை முன்வைக்க முடியும்.
அதாவது குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்படாத பட்சத்தில்தான் இடைக்கால கணக்கறிக்கையை முன்வைக்க முடியும். அரச நிதி முகாமைத்துவ சட்டம் நடைமுறையில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த சட்டத்தின் ஏற்பாடுகள் ஏதும் பின்பற்றப்படவில்லை.
பெரும்பான்மை உள்ளதால் இந்த அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுகிறது. எதிர்க்கட்சியில் 66 உறுப்பினர்கள் உள்ளனர். ஆகவே குறைப்பாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு இடமளியுங்கள். குறைகளை திருத்திற் கொள்ளுங்கள் என்றார்.
No comments:
Post a Comment