பொத்துவில், அறுகம்பே பகுதி உள்ளிட்ட இஸ்ரேலியர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் அவர்களையும் அவர்கள் சார் ஸ்தலங்களையும் இலக்கு வைத்து ஒருங்கமைக்கப்படாத தாக்குதல்கள் நடாத்த திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களை மையப்படுத்திய விசாரணைகள் தொடர்கின்றன.
பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு இது தொடர்பில் விஷேட விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அதில் இதுவரை 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணையில் பிரதான நபர் ஒருவரை கைது செய்ய பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக விசாரணை தகவல்கள் தெரிவித்தன.
குறித்த நபர் போதைப் பொருள் கடத்தலோடு தொடர்புபட்டவர் என கூறப்படும் நிலையில், உரிய சாட்சியங்களோடு அவரைக் கைது செய்ய மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
அதன் தொடராக கொழும்பு நீதிவான் நீதிமன்றில், தற்போதும் சிறையில் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலரை விசாரிக்க விசாரணையாளர்கள் அனுமதி பெற்றுக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக, கொழும்பு , தெஹிவளை, கவுடான வீதியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட பிலால் எனும் பெயரால் அறியப்படும் 30 வயதான மாலைதீவு தொடர்பினை கொண்ட இலங்கையருக்கு, இவ்வாறான தாக்குதல் ஒன்றினை நடாத்த ஒப்பந்தம் கொடுத்ததாக கூறப்படும், அவரை சந்தித்த மூன்றாம் நபரை கைது செய்ய இவ்விசாரணைகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பில் அறிவியல் தடயங்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினர் பகுப்பாய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த தாக்குதல் ஒப்பந்தம் ஒரு இலட்சம் அமரிக்க டொலர்கள் என கூறப்படும் நிலையில் அதனை உறுதி செய்ய விசாரணைகள் தொடர்கின்றன.
இதனைவிட, கொழும்பு, இரத்மலானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட யாழ். சுன்னாகம் பகுதியை சேர்ந்த ஸ்டார் எனும் பெயரால் அறியப்படும் யோகராஜா நிரோஜன் எனும் சந்தேக நபர், 2006 ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய பசீர் வலி மொகமடை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி, அதற்காக 2006 ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி குண்டுத் தாக்குதல் நடாத்தி 7 இராணுவ வீரர்களுக்கு மரணத்தையும், மேலும் பத்து பொதுமக்களுக்கு கடும் காயத்தையும் ஏற்படுத்தியதாக கூறி சட்டமா அதிபரால் தொடுக்கப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் இருந்து பின்னர் நீதிமன்றால் நிரபராதி என விடுவிக்கப்பட்டவர் ஆவார். இது தொடர்பிலும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் அவதானம் செலுத்தி விசாரித்து வருகின்றனர்.
இவ்விரு சந்தேக நபர்களும் சிறைச்சாலைக்குள் வைத்தே அறிமுகம் ஆகியுள்ளதாக கூறப்படும் தகவலின் உண்மைத்தன்மை தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது.
இதனைவிட, கைது செய்யப்பட்ட மூன்றாவது நபர், தெஹிவளையில் உள்ள இஸ்ரேலிய கன்சியூலர் அலுவலகம் அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடியவர் எனவும், 21 வயதான குறித்த இளைஞன் மாவனெல்லை, கிரிந்தெனிய பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸ் தகவல்கள் கூறினர். அவரது தொலைபேசி மற்றும் டிஜிட்டல் உபகரண பதிவுத் தகவல்களை வைத்து அவரிடமும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
நான்காவது நபர் மாலைதீவு பிரஜை என கூறப்படும் நிலையில் அவரும் தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக அறியமுடிகின்றது.
‘இலங்கை மீது நடத்தப்படலாம் என கூறப்பட்ட தாக்குதலின் தன்மையின்படி, அது பயங்கரவாதச் செயலாக இதுவரை எம்மால் அவதானிக்க முடியவில்லை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த நிலைமை காரணமாக, இஸ்ரேலியர்களுக்கு இலங்கையில் மட்டுமல்லாது உலகில் எங்கும் ஆபத்துக்கள் ஏற்படலாம். அதனால்தான் இது அவர்களை இலக்கு வைத்த தாக்குதல் என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அது தவிர, இங்கு சுற்றுலா பயணிகளாக இருக்கும் வேறு வெளிநாட்டவரை குறிவைத்தோ அல்லது இலங்கையர்களை குறிவைத்தோ ஒரு நாசகார சம்பவம் இதில் உள்ளடக்கப்படவில்லை.’ என பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இதுவரையிலான விசாரணைகளில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கான முகாந்திரம் வெளிப்படுத்தப்படவில்லை என விசாரணை நிறுவனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான தகவல்கள் விசாரணையில் வெளிப்பட்டுள்ள சூழலில், மிக முக்கியமான பல அதிர்ச்சிகர தகவல்களும் வெளிப்பட்டுள்ளன.
அடுத்து வரும் 4 மாதங்களில் அதிக சுற்றுலா பயணிகள்
எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். குறிப்பாக நவம்பர் முதல் அறுகம்பே பகுதிக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதில் அதிகமானோர் இஸ்ரேலியர்களாவர்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியக தரவுகளின்படி, இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் இந்தியா, சீனா, ரஷ்யா, ஜேர்மனி, பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தே அதிக சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வந்துள்ளனர்.
அந்த தரவுகளின்படி, இந்த வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இஸ்ரேலில் இருந்து 20,515 சுற்றுலாப் பயணிகளும் 43,678 அமெரிக்கர்களும் 136,464 பிரித்தானிய பிரஜைகளும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
ஆனால், சுற்றுலா நடவடிக்கை எனும் பேரில் இஸ்ரேலும், அதன் உளவு அமைப்பான மொசாட்டும் இலங்கைக்குள் குறிப்பாக கிழக்கில் முஸ்லிம்களிடையே குழப்பத்தை அல்லது வன்முறையை தூண்ட முயன்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், அறுகம்பை பகுதிகளிலும் திருகோணமலை மாவட்டத்திலும், தெற்கின் வெலிகம, அஹங்கம பகுதிகளிலும் இஸ்ரேலியர்களின் நடவடிக்கைகள் இதனை பறைசாற்றுவதாக உள்ளன.
குறிப்பாக திருகோணமலையில் காஸாவுக்கு எதிரான சுவரோவியங்கள் இஸ்ரேலியர்களால் வரையப்பட்டுள்ளதுடன், முஸ்லிம் பள்ளிவாசலை மிக அண்மித்து ஹீப்ரு மொழியிலான இஸ்ரேலிய இராணுவ வீரர்களுக்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
வெலிகம பகுதியில் தொடர்ச்சியாக ஒரு மதரஸா பாடசாலை தீ பரவலுக்கு உள்ளான நிலையில், அதன் அருகே இருந்த கட்டிடத்தில் இஸ்ரேலியர்கள் தங்கியிருந்தமை அச்சம்பவம் தொடர்பிலும் சந்தேகத்தையே தோற்றுவித்துள்ளது.
எனவே இது இலங்கையை பொறுத்தவரை சுற்றுலா பயனிகள் எனும் போர்வையில் நாட்டுக்குள் வரும் இஸ்ரேலிய இராணுவ சிப்பாய்கள் மற்றும் மொசாட் முகவர்களின் திட்டமிட்ட வன்முறை தூண்டல் நடவடிக்கைகளாக பார்க்க வேண்டி இருக்கின்றது.
இது தொடர்பில் மக்கள் போராட்ட அமைப்பின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் புபுது ஜயகொட இவ்வாறு கூறுகின்றார்.
‘சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வந்திருக்கும் இஸ்ரேலியர்கள் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் முஸ்லிம் மக்களை கோபமூட்டும் வகையில் காஸாவில் இடம்பெற்றுவரும் இன அழிப்பு தொடர்பான சித்திரங்களை மதில்களில் வரைந்நிருக்கின்றனர். அதேபோன்று யுத்தத்தில் கொல்லப்பட்ட இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளும் திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் ஒட்டப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக முஸ்லிம்களின் பள்ளிவாசல் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் வரையான தூரத்தில் ஒட்டப்பட்டிருக்கின்றன. இந்த விடயங்களை யார் செய்கிறார்கள் என்பதை அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும்.
காஸாவில் இடம்பெறும் இஸ்ரேல் இராணுவத்தின் இன அழிப்புக்கு எதிராக இலங்கையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பலஸ்தீனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து வந்திருக்கின்றன.
சுற்றுலா விசாவில் வருபவர்கள் எவ்வாறு மதில்களில் சித்திரம் வரையவும் சுவரொட்டிகளை ஒட்டவும் முடியும்?. எமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அந்த பிரதேசத்தில் தங்கி இருக்கும் இஸ்ரேல் இனவாத பிரிவினரே இதனை செய்துள்ளனர்.
அத்துடன் இஸ்ரேலியர்கள் நாட்டுக்குள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு கட்டிடங்கள் இருக்கின்றன. பொலிஸ் பேச்சாளரும் இதனை தெரிவித்திருந்தார். சுற்றுலா விசாவில் வந்து எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும்.
வியாபாரம் செய்வதாக இருந்தால் அதற்கு அரசாங்கத்தின் பூரண அனுமதி பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதேபோன்று மத வழிபாட்டு தலங்களும் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றனர். தெஹிவளை அல்விஸ் பிரதேசத்தில் யூத மத வழிபாட்டு இடமொன்று நிர்மாணிக்கப்படுகிறது. எவ்வாறு இதற்கு இடமளிக்க முடியும்?
யூத வழிபாட்டு நிலையம் தெஹிவளை, வெலிகம, அறுகம்பே போன்ற இடங்களிலும் நிர்மாணிக்கப்படுகின்றன. அந்த வழிபாட்டு நிலையங்களுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்கின்றன.
இதனால் முஸ்லிம் பகுதிகளில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலியர்களை இலக்குவைத்து தாக்குதல் இடம்பெறப்போவதாக தெரிவிக்கப்படும் தகவல் தொடர்பிலும் சந்தேகம் எழுகிறது. நாட்டுக்குள் இஸ்ரேலியர்களின் இந்த நடவடிக்கை சில காலமாக இருந்து வருகிறது.
அதேபோன்று அண்மையில் சுற்றுலா பயணிகள் என இஸ்ரேலியர்கள் 20 ஆயிரம் பேர் வரை இலங்கைக்கு வந்தனர். அவர்களில் இஸ்ரேல் இராணுவத்தைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தனர். ஏனெனில் காஸாவில் இஸ்ரேல் இராணுவம் யுத்தம் நடத்துவதில்லை.
அங்கு இன அழிப்பே அவர்கள் மேற்கொள்கிறார்கள். யுத்தம் இடம்பெறுமாக இருந்தால் இராணுவத்தினருக்கிடையிலேயே மோதல் இடம்பெற வேண்டும்.
ஆனால் காஸாவில் 10 நிமிடங்களுக்கு ஒரு சிறுவன் கொலை செய்யப்படுகிறான். இவ்வாறு இனப் படுகொலை செய்யும் இஸ்ரேல் இராணுவத்தினர் மன அழுத்தங்களுக்கு ஆளாகக்கூடாது என்பதற்கே குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் அவர்களை இவ்வாறு சுற்றுலா அனுப்பி, அவர்களின் மன அழுத்தத்தை இல்லாமலாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எனவே இன அழிப்பை மேற்கொண்டுவரும் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மன அழுத்தத்தில் இருந்து மீள இலங்கையின் வளங்களை இஸ்ரேல் பயன்படுத்துகிறதா என்பது தொடர்பாகவும் இஸ்ரேலியர்களால் நாட்டுக்குள் நிர்மாணிக்கப்படும் சட்டவிராேத கட்டிடங்கள் மற்றும் அவர்களின் மத வழிபாட்டு தலங்களுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது தொடர்பிலும் தற்போதுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இதற்கு முன்னர் இருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் தெளிவுபடுத்த வேண்டும்.
பொலிஸ்மா அதிபரும் விளக்கமளிக்க வேண்டும். இஸ்ரேலியர்களின் இந்த நடவடிக்கையால் எமது சுற்றுலா துறை பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதுடன் நாட்டுக்குள் மதங்களுக்கிடையில் முரண்பாடும் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அதனால் அரசாங்கம் இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில்தான் இலங்கைக்கு சுற்றுலா வந்து வர்த்தகம், மதம் சார் மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து வெளிநாட்டவர்களையும் கைது செய்யுமாறு பொலிஸாருக்கும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலா வீசாவில் வந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, இலங்கையின் சனத் தொகையில் பூச்சியமாக இருக்கும் யூதர்கள், 9 வீதமான முஸ்லிம்களை சீண்டுவதை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்க கூடாது. தன் குடிமக்களை சுற்றுலாவின் பேரில் வரும் ஒரு கும்பல், அச்சுறுத்திவரும் சூழலில் அதற்கு எதிர் நடவடிக்கைகளை அரசாங்கம் வேகமாக எடுக்க வேண்டும்.
நாட்டில் சட்டவிரோதமாக யூதர்களால் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், சட்ட விரோத ஜெப ஆலயங்கள் சட்ட ரீதியாக அகற்றப்படல் வேண்டும். இஸ்ரேல், மொசாட்டின் ஆதிக்கத்தை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்க வேண்டும்.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவின் கூற்றுப்படி, தற்போது அறுகம்பேயில் இருந்து இஸ்ரேலியர்கள் அனைவரும் வெளியேறியுள்ளனர். ஆனால் அவர்களது கட்டிடங்கள், ஜெப ஆலயம் ஆகியன அவ்வாறே உள்ளது.
சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் யார்?
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, கிழக்கிலிருந்து இஸ்ரேலியர்கள் வெளியேறிவிட்டதாக கூறியபோதும் மூன்று இஸ்ரேலியர்கள் இன்னும் அறுகம்பே பகுதியில் தங்கியிருக்கின்றனர். அவர்களில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் பல வருடங்களாக அறுகம்பேயில் நிரந்தரமாக வசிப்பவர் என்பது தெரியவந்துள்ளது. அவரை சந்திக்க வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குழு ஒன்று அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்றுள்ள நிலையில் அவர்களிடம் பேச அந்த இஸ்ரேலியர் மறுத்துள்ளார்.
அத்துடன் இதன்போது அவர் தங்கியிருந்த வீட்டிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவின் இரண்டு அதிகாரிகள், இரண்டு இராணுவத்தினர், பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவின் பல அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் தொடர்பில் வினவியபோது, அது தொடர்பில் தேடிப்பார்த்து பதில் அளிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித்த ஹேரத்தும், பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவவும் நழுவிவிட்டனர்.
பதிவு செய்யப்படாத ஜெப ஆலயங்கள்
அறுகம்பே உள்ளிட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள யூதர்களின் ஜெப ஆலயங்கள் எங்கும் பதிவு செய்யப்பட்டவை அல்ல என்பது தெரியவந்துள்ளது. இந்த ஜெப ஆலயங்களுக்கு இஸ்ரேலில் இருந்து மத போதகர்களும் வந்து செல்வது தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.என். குமாரி தெரிவிக்கையில், “இதுவரை, யூதர்கள் தரப்பில் எந்த அமைப்பையும், ஸ்தலத்தையும் பதிவு செய்யவில்லை. பெரும்பாலான கிறிஸ்தவ அல்லாத விவகாரங்கள் கிறிஸ்தவ விவகாரங்களின் மத அம்சத்தில் கையாளப்படுகின்றன. நாங்கள் இப்போது கிறிஸ்தவ மதத்துடன் நேரடியாக தொடர்பில்லாதவற்றை பதிவு செய்ய வேலை செய்கிறோம். வெளிநாடுகளில் இருந்து வந்து பிரார்த்தனை மையங்களைப் போல ஒவ்வொன்றாகத் தொடங்குகிறார்கள். அவற்றைப் பதிவு செய்ய எந்த அமைப்பும் இல்லை.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, எவரும் விரும்பிய மதத்தை பின்பற்றலாம், எனவே பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம்.’ என தெரிவித்துள்ளார்.
எனவே நாட்டின் நிலையான அமைதி மற்றும் குடிமக்களின் அச்ச நிலையை நீக்க, சுற்றுலா வருவோரை சுற்றுலா பயணிகளாக மட்டும் நடந்துகொள்ள அனுமதிக்கும் வகையிலான பொறிமுறைகள் அவசியமாகும்.
Vidivelli
No comments:
Post a Comment