மக்கள் போராட்டத்தை அடுத்து ஜோர்டான் பிரதமராக இருந்த ஹனி அல் முல்கி ராஜினாமா செய்ததை அடுத்து, உலக வங்கியில் பணியாற்றிய ஓமர் ரஸ்ஸாஸ் புதிய பிரதமராக நியமித்து மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.
ஜோர்டான் நாட்டில் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கேற்ப வரிவிதிப்பு சட்டத்தில் அரசு மாறுதல் செய்ய தீர்மானித்தது. இதனால், கொந்தளித்து எழுந்த மக்கள் வீதிகளில் திரண்டு தொடர்ச்சியாக போராடினர்.
போராட்டம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், இரண்டு ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஹனி அல் முல்கியை ராஜினாமா செய்யக்கோரி ஜோர்டன் மன்னர் அப்துல்லா உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, மன்னரை கடந்த 4-ம் திகதி சந்தித்த ஹனி அல் முல்கி, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அவரிடம் ஒப்படைத்தார்.
இதனை அடுத்து, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவரும், உலக வங்கியில் பணியாற்றியவருமான ஓமர் ரஸ்ஸாஸ் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓமர் ரஸ்ஸாஸ் தலைமையிலான அரசு வரிப்பிரச்சினைகளை விரைவில் சீர் செய்ய வேண்டும் எனவும் மன்னர் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment