மன்னார் மாவட்டத்தில் இதுவரை 220 கொரோனா தொற்றாளர்கள், 3 மரணங்கங்கள், 9,677 பி.சி.ஆர். பரிசோதனைகள் : தடுப்பூசி பெற்றுக் கொள்வதால் அன்புக்குரியவர்கள் உயிரிழப்பதை தவிர்க்கலாம் - News View

Breaking

Post Top Ad

Friday, February 12, 2021

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 220 கொரோனா தொற்றாளர்கள், 3 மரணங்கங்கள், 9,677 பி.சி.ஆர். பரிசோதனைகள் : தடுப்பூசி பெற்றுக் கொள்வதால் அன்புக்குரியவர்கள் உயிரிழப்பதை தவிர்க்கலாம்

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 220 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, மாவட்டத்தில் 3 கொரோனா மரண சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை மேலும் மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 73 வயதுடைய வயோதிப பெண் ஒருவரும் அடங்குவார்.

குறித்த பெண் நீண்ட காலமாக சுகவீனம் அடைந்திருந்த நிலையில் முசலி பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். குறித்த வயோதிப பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் பலருக்கு அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பெண் கடந்த புதன்கிழமை அதிகாலை திடீர் என முசலியில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். இவரது உடல் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த பெண் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

மேலும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் மன்னாரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றுகின்றவராகவும், மற்றையவர் மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து தற்போது வரை 220 நபர்கள் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 9,677 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாதத்தின் இறுதி மாதம் அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து 30 வயது தொடக்கம் 60 வயதிற்கு உற்பட்ட சகல தொழில் மேற்கொள்பவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் சுகாதார துறையினருக்கு ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட எவருக்கும் ஒவ்வாமை அல்லது பாராதூரமான பக்க விளைவு ஏற்படவில்லை.

ஆகவே, பொது மக்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் இந்த ஊசியை செலுத்துகின்ற போது அவர்கள் எவ்வித அச்சமும் இன்றி விரைவாக பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு விரைவாக பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் அவர்கள் சார்ந்த நோய் வாய்ப்பட்ட அல்லது அன்புக்குரிய வயோதிபர்கள் ஆகியோர் உயிரிழப்பதை தவிர்த்துக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad