என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஒதுங்கத் தாயார் - சிறிதரன் எம்.பி பகிரங்க அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 8, 2025

என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஒதுங்கத் தாயார் - சிறிதரன் எம்.பி பகிரங்க அறிவிப்பு

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மனநோயாளியான பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஒதுங்கத் தாயார். பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 23ம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்ற சிறப்புரிமை மீறலில் நான் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டு உண்மைக்கும், அறத்திற்கும் மாறான வகையில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் எனக்கு எதிரான சிறப்புரிமை மீறல் பிரேரணை ஒன்றை சபையில் முன்வைத்துள்ளார்.

அரசியலமைப்பின் திருத்தம் செய்யப்பட்ட 2018 ஆண்டின் 18 திருத்தத்தின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 06 திகதி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 11 பேரின் இரகசிய வாக்களிப்பில் தேர்தல் மூலமாக உயர் பதவிகளைத் தீர்மானிக்கும் அரசியலமைப்பு சபைக்கு நான் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்டேன்.

இப்பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உட்பட பலர் கண்வைத்து திரைமறைவில் ஈடுபட்டபோதும் நானும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானும் தேர்தலில் போட்டியிட்டு நான் தெரிவு செய்யப்பட்டேன்.

தெரிவு செய்யப்பட்ட 2024.12.06 திகதி முதல் இன்று வரை எனது கௌரவமான பங்களிப்பை நேர்மையுடனும், அரசியலமைப்பு உறுப்புரிமை 9 இன் பிரகாரமும் எனது மனச்சாட்சிக்கு இணங்க செயற்பட்டு வருகின்றேன்.

அரசியலமைப்பின் உறுப்புரை 29 இன் பிரகாரமும் உறுப்புரை 7 இன் பிரகாரமும் எனது தேசத்து மக்கள் சார்ந்து பொதுநலனில், மக்கள் நலனில் நின்றே எனது முடிவுகளை மிகத்தெளிவாக அரசியலமைப்பு சபையில் முன்வைத்துள்ளேன்.

என் கட்சிக்காகவோ அல்லது வெளிநபர்களின் நெருக்குதலுக்காகவோ எந்த முடிவுகளையும் நான் மாற்றிக்கொள்ளவில்லை. எந்தவித வெளிப்புற அழுத்தமும் என்மீது பிரயோகிக்கப்படவுமில்லை. அவ்வாறு பிரயோகிக்கவும் முடியாது என்பதை கடந்த ஓராண்டு காலமாக நேர்மையுடனும், கண்ணியத்துடனும் அறம் சார்ந்து தைரியத்துடன் நிரூபித்துள்ளேன்.

சிவில் புத்தி பெரமுன என்ற அமைப்பைச் சார்ந்தவர் எனக்கூறப்படும் சஞ்சய் மகவத் என்பவரால் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் நான் சொத்துக்கள் குவித்து வைத்திருப்பதாக 2025 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25ஆம் திகதி முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்ததாக பத்திரகைகளில், சமூக ஊடகங்களில் பார்வையிட்டிருந்தேன்.

செய்திகள் வெளிவந்த உடனேயே பகிரங்கமாக இவ்விசாரணையைச் செய்து உண்மையை வெளிக்கொண்டு வருமாறு வெளிப்படையாகக் கூறியிருந்தேன். இன்று ஏறத்தாள 04 மாதங்களை நெருங்குகின்றபோதும் இதுவரை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் எந்த முடிவுகளும் வெளியிடப்படவில்லை.

இப்பொழுதும் இந்த உயர்ந்த சபையினூடாக ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். எனது பெயரிலோ, என் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அல்லது பினாமிகள் பெயரிலோ எனக்கு சொத்துக்கள் இருந்தால் விசாரணை செய்து சட்டநடவடிக்கை எடுக்குமாறு பகிரங்கமாக கேட்கின்றேன்.

அதுபோல் எனது பெயரிலோ அல்லது எனது சிபாரிசிலோ, கடந்த காலங்களில் நான் மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரம் ஏதும் பெற்றிருந்தால் சிபார்சு செய்திருந்தால் உடன் வெளிப்படுத்தி என் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோருகின்றேன்.

அசியலமைப்பு உறுப்புரை 41 இன் பிரகாரம் நான் நீதியான முறையில் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்டுள்ளேன். அரசியலமைப்பு சபையில் மொத்தம் 10 உறுப்பினர்களில் நான் மட்டுமே இலங்கை வரலாற்றில் முதன்முதலில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டவன் எனக்கருதுகிறேன்.

பாராளுமன்ற நிலையியற்கட்டளை 29(2) பிரகாரம் இது ஒரு சிறப்புரிமை மீறல் அல்ல என்பதையும் அரசியலமைப்பின் உறுப்புரை 41/ 1 இன்படி விசாரணை நடாத்தி உண்மையை முதலில் வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்தபோது தமிழ் அதிபர் ஒருவரை முழந்தாழிட்டார். இவர் ஒரு மன நோயாளி என்றே குறிப்பிட வேண்டும்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 29(2) பிரகாரம் இது ஒரு சிறப்புரிமை மீறல் அல்ல என்பதையும் அரசியலமைப்பின் உறுப்புரை 41/ 1 இன்படி விசாரணை நடத்தி உண்மையை முதலில் வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகத்தயார். அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கும் ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார்.

No comments:

Post a Comment