(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கொழும்பு வடக்கு, நுகேகொட, கம்பஹா, எல்பிட்டிய, தங்காலை, காலி மற்றும் மாத்தறை பொலிஸ் பிரிவுகளிலேயே திட்டமிட்ட குற்ற கும்பல்களின் செயற்பாடுகள் அதிகளவில் இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தின்போது, நாட்டில் நடக்கும் திட்டமிட்ட குற்றக் கும்பல்களின் செயற்பாடுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2020 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கும்பல் வன்முறை அல்லது கும்பல் கொலைச் சம்பவங்கள் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் இலங்கை பொலிசில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை யாதென்பதையும் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் அல்லது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடுப்பு அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை யாதென்பதையும், மாகாண ரீதியாக வெவ்வேறாகவும், கும்பல் வன்முறை தொடர்பாக, இலங்கைப் பொலிசாருக்கும் உள்ளூர் நிர்வாகத்திற்கும் வழங்கப்பட்ட ஏதேனும் பணிப்புரைகள் உள்ளடங்கலாக அனைத்து மாகாணங்களிலும் சட்டங்களையும் சட்டச் செயன்முறைகளையும் சமச்சீராக அமுல்படுத்துவதை உறுதிப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாதென்பதையும், கும்பல்வன்முறையால் பாதிக்கப்படக்கூடிய உயர் அபாயநேர்வுடைய ஏதாவது மாவட்டங்களை அல்லது பிரதேசங்களை அமைச்சு அடையாளம் கண்டுள்ளதா என்பதையும், அவ்வாறாயின், அத்தகைய மாவட்டங்களில், பிரதேசங்களில் எதிர்காலக் கும்பல் வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும் அமைச்சர் சபைக்கு அறிவிப்பாரா? என ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கேள்வி எழுப்பினார்.
இதன்போது பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடு முழுவதும் ஒரே வகையில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் உத்தரவுகள் பொலிஸ் கட்டளைகள் சட்டத்தின் கீழ் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை நாட்டில் அதிகளவிலான திட்டமிட்ட குற்ற கும்பல்களின் செயற்பாடுகள் அதிகளவில் தென் மற்றும் மேல் மாகாணங்களிலேயே நடக்கின்றன. இவற்றில் கொழும்பு வடக்கு, நுகேகொட, கம்பஹா, எல்பிட்டிய, தங்காலை, காலி மற்றும் மாத்தறை பொலிஸ் பிரிவுகளிலேயே அதிகளவான சம்பவங்கள் பதிவாகின்றன.
எவ்வாறாயினும் நாடுமுழுவதும் குற்றச் செயல்களை கட்டுபடுத்த புலனாய்வு பிரிவு, பொலிஸ் உளவு பிரிவுகள் செயற்படுகின்றன. விசேட தேடுதல் மற்றும் ரோந்து நடவடிக்கைகளும் நடக்கின்றன. அத்துடன் குற்றவாளிகள் தப்பி செல்ல முடியாத வகையில் விசேட பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.

No comments:
Post a Comment