தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு : அதற்கான பொறுப்பு பாராளுமன்றத்திற்கே உள்ளது என்றார் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Saturday, November 8, 2025

தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு : அதற்கான பொறுப்பு பாராளுமன்றத்திற்கே உள்ளது என்றார் ஜனாதிபதி

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அதற்காக ரூ. 10 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதற்கான பொறுப்பு பாராளுமன்றத்திற்கே உள்ளது என்றும், பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் இணைந்து சரியான தேர்தல் முறையை உருவாக்கித் தந்தால் நாம் தேர்தல் நடத்தத் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இந்த வருடத்தில் தேர்தல் நடத்தும் எதிர்பார்ப்பிலேயே ரூ. 10 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (08) 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தும் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த ஜனாதிபதி, ”மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சட்டம் ஒன்று உள்ளது. எனினும் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் முடிவடையவில்லை. உங்களது அரசாங்கத்தில் எல்லை நிர்ணய சட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியும். எனினும் நீங்கள் அதை செய்யவில்லை. 

தயாசிறி ஜயசேகரவும் அப்போது அமைச்சராக இருந்தார். எல்லை நிர்ணய அறிக்கையை சமர்ப்பித்தபோது இந்த நாட்டில் முதலாவது தடவையாக அதனை சமர்ப்பித்த பைசர் முஸ்தபா அமைச்சரே அதற்கு எதிராக கையுயர்த்தினார். அமைச்சரே கொண்டுவந்த அறிக்கையை அவரே தோற்கடித்தார் என்பதே விந்தை.

இப்போது எம்மிடம் மாகாண சபைத் தேர்தலை கேட்கின்றனர். இப்போது சட்டத்தில் இடமில்லை. நான் சட்டமா அதிபரிடம் அதற்காக சட்டத்தில் காணப்படும் இடம் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு கேட்டுள்ளேன். 

விருப்பு வாக்கு தேர்தல் முறை வேண்டாம் என இங்கு சட்டம் நிறைவேற்றப்பட்டதை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த வரவு செலவுத் திட்டத்தில் நாம் ரூ. 10 பில்லியனை தேர்தலை நடத்துவதற்காக ஒதுக்கியுள்ளோம். தேர்தலை எப்போது நடத்துவது என்பது நான் தீர்மானிக்க முடியாது.

பாராளுமன்றமே அதற்கு தீர்மானிக்க வேண்டும் கட்சித் தலைவர்கள் கூடி அதற்கான சட்டத்தை உருவாக்கித் தாருங்கள். நீங்கள் சட்டத்தை உருவாக்கித் தந்தால் நாம் தேர்தலை நடத்துவோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment