தேவாலய அருட்தந்தை விகாரையில் போதனை செய்வதை போன்றே வரவு செலவுத் திட்ட உரை : ஜனாதிபதி கண்களை மூடிக் கொண்டு முன்வைக்கப்படும் சகல நிபந்தனைகளையும் ஏற்கிறார் - ஹர்ஷ டி சில்வா விசனம் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 8, 2025

தேவாலய அருட்தந்தை விகாரையில் போதனை செய்வதை போன்றே வரவு செலவுத் திட்ட உரை : ஜனாதிபதி கண்களை மூடிக் கொண்டு முன்வைக்கப்படும் சகல நிபந்தனைகளையும் ஏற்கிறார் - ஹர்ஷ டி சில்வா விசனம்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுத்துச் செல்கிறார். தேவாலய அருட்தந்தை விகாரையில் போதனை செய்வதைப் போன்றே ஜனாதிபதி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேரடி நிவாரணங்கள் ஏதும் வழங்கப்படவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு பொருளாதார பாதிப்பை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் குறுகிய காலத்துக்குள் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டது. இதுவே உண்மை. உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்போது 70 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் (-1) பெறுமானமாக குறைவடைந்திருந்தது.

பொருளாதார மீட்சிக்காக கடந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடியது. சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த சகல நிபந்தனைகளையும் நாங்கள் ஏற்கவில்லை. அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கவில்லை.

ஆனால் இந்த அரசாங்கம் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டது. மக்கள் மத்தியில் சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தியது. ஆனால் இன்று ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்துக்கு எதிராக ஏதும் பேசுவதில்லை. முன்வைக்கப்படும் சகல நிபந்தனைகளையும் கண்களை மூடிக் கொண்டு ஏற்கிறார்.

மக்களின் வரிப் பணத்தால் திறைசேரி நிரம்பியுள்ளது. ஆனால் மக்கள் பொருளாதார ரீதியில் மென்மேலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தின் வரி வருமான இலக்கு எதிர்பார்க்கப்பட்டதை காட்டிலும் அதிகரித்துள்ள நிலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரி பற்றி ஜனாதிபதி ஏதும் பேசவில்லை.

வற் வரி வலையமைப்பு 2026 ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்ற நிலையில் சிறந்த விடயங்களும் உள்ளன. டிஜிட்டல் மயப்படுத்தல் குறித்து அரசாங்கம் அதீத கவனம் செலுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தையே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுத்துச் செல்கிறார். தேவாலயத்தின் அருட்தந்தை விகாரையில் போதனை செய்வதை போன்றே ஜனாதிபதி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்கள் மற்றும் பரிந்துரைகள் மாத்திரமே வரவு செலவுத் திட்டத்தை ஆக்கிரமித்துள்ளன. மக்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment