லோரன்ஸ் செல்வநாயகம்
நாட்டின் தற்போதைய 6 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கையிருப்பை 7 பில்லியன் டொலராக அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருந்தபோது நாட்டின் கடன் அளவு மொத்த உ்ற்பத்தியில் நூற்றுக்கு 114 வீதமாக இருந்துள்ள நிலையில் அதனை தற்போது 96 வீதமாக குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த வகையில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையுடன் மக்களுக்கு அனைத்து நிவாரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அரச நிதி ஒழுங்கு மற்றும் அரச நிதி முகாமைத்துவம் ஆகிய இரண்டு விடயங்களையும் அரசாங்கம் முறையாக பேணி வந்தமையே ஒரு வருடத்துக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர நிலைமைக்குக் கொண்டுவர உறுதுணையாக அமைந்தது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (08) இடம்பெற்ற ஜனாதிபதியின் வரவு செலவு திட்ட உரை மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”வங்குரோத்தடைந்த நாட்டையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொறுப்பேற்றார். கடன் செலுத்த முடியாமல் அனைத்து கடன் தரப்படுத்தும் நிறுவனங்களும் எம்மை வீழ்த்தியிருந்த நிலையே காணப்பட்டது.
உலக நாடுகள் எமக்கு விசா வழங்கவில்லை. இலங்கையர்கள் அந்த நாடுகளுக்குச் சென்றால் மீ்ண்டும் அங்கிருந்து நாட்டுக்கு திரும்பி செல்லமாட்டார்கள் என்ற சந்தேகமே அங்கு நாடுகளிடம் காணப்பட்டது. எமது கடவுச்சீட்டுக்கு எந்த மதிப்பும் இருக்கவில்லை. அவ்வாறானதொரு நாட்டையே ஜனாதிபதி பொறுப்பேற்று இன்று நாட்டில் ஸ்திர நிலையை ஏற்படுத்தியுள்ளார்.
இத்தகைய முன்னேற்றத்திற்கு அரசாங்கம் மட்டுமல்ல இதற்கு முன்னர் இருந்த அரசாங்கமும் காரணம் என எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர். அவ்வாறானால் 2022 மார்ச் மாதத்தில் நடத்தவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலை அவர்கள் நடத்தியிருக்கலாமே? தேர்தல் நடத்த பணம் இல்லை என்றல்லவா அன்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். நாம் அதிகாரத்துக்கு வந்து தேர்தலை நடத்தும் வரை உள்ளூராட்சி சபைத் தேர்தலை இவர்களுக்கு நடத்த முடியாமல் போனது.
அதேபோன்று 2019 இல் நாட்டில் நிலவிய பொருளாதார நிலைக்கு மீண்டும் நாட்டை முன்னேற்றுவதற்கு குறைந்தபட்சம் 10 வருடங்களாவது செல்லும் என்றே அவர்கள் தெரிவித்தனர். அவ்வாறிருந்த நாட்டையே நாம் பொறுப்பேற்றோம்.
ஒரு வருடத்துக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டுவர முடிந்துள்ளது. சர்வதேச நிறுவனங்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளன. அந்த வகையில் ஒரு வருட காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என பல சர்வதேச நிதி நிறுவனங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. குறைந்தளவு அபிவிருத்தி வேகத்தையே அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
அரசாங்கத்தின் அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளே. மொத்த தேசிய உற்பத்தியில் அரச வருமானத்தை 15.3 வீதத்தை தாண்டிச் செல்ல முடியுமாகவுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை உலகில் பலமான பொருளாதாரமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தையே அரசாங்க முன்னெடுத்துள்ளது. அதற்கு எதிர்க்கட்சியும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment