2028 ஆம் ஆண்டிலும் நாமே ஆட்சியில் இருப்போம், கடனை நாமே செலுத்துவோம் : மக்களுக்கு எதிராக எவரேனும் தவறிழைத்திருந்தால் தண்டனை வழங்கப்படும் - ஜனாதிபதி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 8, 2025

2028 ஆம் ஆண்டிலும் நாமே ஆட்சியில் இருப்போம், கடனை நாமே செலுத்துவோம் : மக்களுக்கு எதிராக எவரேனும் தவறிழைத்திருந்தால் தண்டனை வழங்கப்படும் - ஜனாதிபதி தெரிவிப்பு

கடனை செலுத்துவது தொடர்பில் எவரும் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும், 2030 ஆம் ஆண்டுக்குள் பொதுக்கடனை 87 வீதமாகக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி 2028 ஆம் ஆண்டிலும் நாமே ஆட்சியில் இருப்போம், நாமே கடனை செலுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு எதிராக எவரேனும் தவறிழைத்திருந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு இணங்க தண்டனை வழங்கப்படும் என்றும், அத்துடன் எவருக்கும் அது தொடர்பில் பாரபட்சம் கிடையாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொருளாதார பிரதிபலன்கள் சமமாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதே 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என குறிப்பிட்ட அவர், ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள கடனை செலுத்துவது தொடர்பில் எவரும் கவலை கொள்ளத் தேவையில்லை என்பதை சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, 2030 ஆம் ஆண்டுக்குள் பொதுக் கடனை 87% ஆகக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்றும், 2028 ஆம் ஆண்டிலும் நாமே ஆட்சியில் இருப்போம்; நாமே கடனை செலுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

2032 ஆம் ஆண்டு தேசிய உற்பத்திக்கு சமமாக கடனை 90 வீதம் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், பொய்யான வதந்திகளை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது எமது நம்பிக்கை என்றும் தெரிவித்தார்.

நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (08) பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, ”நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. பொருளாதாரம் ஸ்திரத்தன்மையில் இருக்கிறது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு தேசிய வருமானம், அரச நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளுக்கு இடையில் மோதல் இடம்பெற்ற போதிலும் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வருட இறுதிக்குள் அந்திய செலாவணி 7 வீதமாக அதிகரிக்கும் .

வருமானம் குறைந்த மக்களுக்கு அஸ்வெசும திட்டத்தை முன்னெடுப்பதுடன், 2026 ஆம் ஆண்டு மீண்டும் அஸ்வெசும பெறுவோரை மீளாய்வு செய்யவுள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளை மீளாய்வு செய்து, நாட்டுக்கு தேவையான பிரதி பலன்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். அரச நிறுவனங்கள் மற்றும் அரச சேவைகள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டின் சேவைகளை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு E சேவை அறிமுகப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

2026 மார்ச் மாதத்தில் அனைவரும் தங்களுடைய சொத்து விபரங்களை அறிவிக்கும் வகையில் டிஜிட்டல் சேவை அறிமுகப்படுத்தப்படும். இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதன் மூலம் பொருளதாரத்தை கட்டியெழுப்ப முடியும்.

2025 ஆம் ஆண்டு நாட்டுக்கு 823 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 2026 ஆம் ஆண்டு அரச சொத்துக்களை முகாமைத்துவம் செய்யும் சட்ட மூலத்தை நிறைவேற்றுவோம்.

குற்றங்களை கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும்போது என்னை ஹிட்லர் என்று விமர்ச்சிக்கின்றனர். மக்களுக்கு எதிராக யாரேனும் தவறு இழைத்திருந்தால், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்கப்படும். யாருக்கும் பாரபட்சம் பார்க்கப்படாது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் தேசிய கடன் சேவை 760 மில்லியன் டொலர் அதிகரித்துள்ளது” என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment