பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படை கொடுப்பனவு 1,550 ரூபா - பாராளுமன்றத்தில் தெரிவித்த ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Sunday, November 9, 2025

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படை கொடுப்பனவு 1,550 ரூபா - பாராளுமன்றத்தில் தெரிவித்த ஜனாதிபதி

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ரூ. 1,750 ஆக அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ. 1350 சம்பளத்தை அடுத்த வருடம் ஜனவரி முதல் ரூ. 1550 ஆக அதிகரிப்பதற்கும், அதற்கு மேலதிகமாக வரவு ஊக்குவிப்பாக நாளொன்றுக்கு அரசாங்கம் மேலும் ரூ. 200 வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.

அந்த வகையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ரூ. 1750 ஆக வழங்கப்படுவதுடன் அதற்காக ரூ. 5000 மில்லியன் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சம்பள திருத்தங்களுக்கு அமைய இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ. 110 பில்லியன் ஒதுக்கியுள்ளதாகவும் அது அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தி, முதலீடுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கி மக்கள் நலன் சார்ந்த விடயங்களுக்கு முன்னுரிமையளித்து பல்வேறு யோசனைகள் அடங்கிய 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இந்த வரவு செலவு திட்ட உரை 4 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள் ஜனாதிபதியால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி அபிவிருத்தி திட்டங்கள், மக்களுக்கான சலுகைகள் தொடர்பில் குறிப்பிடும் போது, ஆளும் கட்சியினர் மேசைகளில் தட்டி தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை விசேட அதிதிகள் ஆசனங்களில் அமர்ந்திருந்த வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகள் பலரும் உன்னிப்பாக கவனம் செலுத்தியதைக் காண முடிந்தது.

ஜனாதிபதியின் உரைக்கு மத்தியில் எதிர்க்கட்சியினர் சில கேள்விகளை கேட்டதுடன் ஜனாதிபதியும் அவற்றுக்கு பதிலளித்தார்.

குறிப்பாக டிஜிட்டல் அடையாள அட்டைக்கு தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கும் விடயத்தில் தன்னை அனைவரும் ஹிட்லர் போன்று செயற்படுவதாக தெரிவிப்பதாகவும், ஹிட்லருக்கு எதிராக அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்ததுபோல் அரசாங்கத்துக்கு எதிராக நாமும் இணைய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருவதை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன் எதிர்க்கட்சியினரைப் பார்த்து உங்களில் யார் அமெரிக்கா? யார் ரஷ்யா என அவர் கேட்டபோது, எதிர்க்கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டதைக் காண முடிந்தது.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ரூ. 10 மில்லியன் ஒதுக்குவதாக ஜனாதிபதி தெரிவித்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியை பார்த்து எதையோ தெரிவிக்க முற்படுகையில் குறுக்கிட்ட ஜனாதிபதி, கடந்த வருடத்தில் இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு சில மாவட்டங்களில் முறையாக முன்னெடுக்கப்படவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அந்த தவறு இந்தமுறை இடம்பெறாது என அவர் தெரிவித்தபோது எதிர்க்கட்சியினர் அதற்கு ஆதரவு தெரிவித்ததையும் காண முடிந்தது.

அதேபோன்று மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் எல்லை நிர்ணய சட்டத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்த அமைச்சரே அதற்கு எதிராக வாக்களித்த வரலாறு எமது நாட்டில்தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் தயாரித்திருக்கும் வரவு செலவு திட்டத்துக்கு அனைவரும் ஆதரவளிக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment