சிறைச்சாலைகளில் உள்ள சில கைதிகள், கையடக்கத் தொலைபேசிகள் மூலம் வெளி நபர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவங்கள் தொடர்பாக, முழுமையான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு குற்றப் பிரிவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கையைக் கவனத்திற் கொண்டு, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதேவேளை, தங்களுக்கு கிடைத்த பெயர் குறிப்பிடப்படாத முறைப்பாடொன்றின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட கைதிகளை அடையாளம் காண தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளைக் கோரி விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், குறித்த தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள உத்தரவு பிறப்பிக்குமாறும் பொலிஸார் நீதிமன்றத்தில் கோரினர்.
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்ட நீதவான், பொலிஸார் கோரிய தொலைபேசி அழைப்பு விபரங்களை வழங்குமாறு பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் ஒன்றில் விரிவான விசாரணையை நடத்தி, அதில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment