இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் (STC) முன்னாள் தலைவர் ஹுசைன் அகமது பைலா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான ஹுசைன் அகமது பைலா இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (31) கைது செய்யப்பட்டார்.
2015 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு 9 கோடி 96 இலட்சத்து 79 ஆயிரத்து 799 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்காக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்படி, அவர் தனது பதவிக் காலத்தில் எந்த தேவையும் இல்லாமல் 50 தற்காலிக கிடங்குகளை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாகவும், அதற்குச் சமமான தொகையை வெளிப்புறத் தரப்பினருக்கு இலாபமாகப் பெற்றுக் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஹுசைன் அகமது பயிலா இன்று (31) காலை சுமார் 8.30 மணியளவில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பணியாற்றிய பைலா, 2004 முதல் 2010 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
அந்தக் காலகட்டத்தில், அவர் பல பிரதி அமைச்சுப் பதவிகளை வகித்தார், அவற்றில் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தேசிய தொழில் முயற்சி மேம்பாடு (2004-2005), திட்ட அமுலாக்கம் (2005-2007), மற்றும் வெளிவிவகாரம் (2007-2010) உள்ளிட்ட பல பிரதி அமைச்சர் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

No comments:
Post a Comment