(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற உரத்தை இறக்குமதி செய்ததால் சீன நிறுவனத்துக்கு 69 இலட்சம் டொலர் நட்டஈடு செலுத்த நேரிட்டது. இந்த முறைகேட்டுடன் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு இல்லை. கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்று விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) நடைபெற்ற அமர்வில் வாய் மூல விடைக்கான வினாக்களின்போது பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின்போது சீன நிறுவனத்திடமிருந்து 96 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை கொள்வனவு செய்வதற்கு முறையற்ற வகையில் விலைமனுகோரல் செய்யப்பட்டது. இதற்கமைய முதற்கட்டமாக 20505 மெற்றிக் தொன் உரம் இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்ட உரம் இலங்கையின் காலநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அறிவித்ததன் பின்னர் சீன கப்பல் உரத்தை துறைமுகத்துக்கு கொண்டுவராமல் கடலில் நங்கூரமிட்டிருந்தது. இதனால் இலங்கைக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டன.
இறுதியில் இலங்கைக்கு ஒரு மெற்றிக் தொன் கூட கிடைக்கவில்லை. 69 இலட்சம் டொலர் நட்டஈட்டை சீன நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த முறைக்கேட்டுடன் தொடர்புடைய தரப்பினருக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.. எவருக்கும் மன்னிப்பு கிடையாது என்றார்.
No comments:
Post a Comment