வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் தெஹிவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய மாவனெல்லை, கிரிந்தெனிய பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் சுஹைல் எனும் இளைஞனை பிணையில் விடுவிக்க கல்கிசை நீதிவான் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் (15) உத்தரவிட்டது.
கல்கிசை மேலதிக நீதிவான் ஹேமாலி ஹால்பந்தெனிய இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எந்த குற்றமும் புரியவில்லை என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுராத ஹேரத், கல்கிசை மேலதிக நீதிவான் ஹேமாலி ஹால்பந்தெனியவுக்கு கடந்த 9ஆம் திகதி அறிவித்திருந்தார்.
இதன்போது திறந்த மன்றில் பொலிஸாரின் நடவடிக்கையை கடுமையாக சாடிய நீதிவான், கடந்த 2025 மார்ச் 27ஆம் திகதி குறித்த விசாரணைகளின் கோவை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸாரே அறிவித்ததாகவும், அவ்வாறான பின்னணியில் சட்ட மா அதிபரின் ஆலோசனை இல்லாமல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பிணையளிக்கும் அதிகரம் நீதிவானுக்கு இல்லை என கல்கிசை மேலதிக நீதிவான் கடந்த 9ஆம் திகதி சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையிலேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொஹம்மட் சுஹைல் எனும் இளைஞன் குறித்த வழக்கு நேற்று கல்கிசை மேலதிக நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது சுஹைல் திறந்த மன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது சுஹைலுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி கீத்ம பெர்ணான்டோவுடன் சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணிகள் ரஷாத் அஹமத், இல்ஹாம் ஹஸனலி, எம்.கே.எம். பர்ஸான் ஆகியோர் ஆஜராகினர்.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் சொலிசிட்டர் ஜெனரால் விராஜ் தயாரத்னவின் கையொப்பத்துடன், சட்டமா அதிபரின் ஆலோசனை மன்றில் பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனை கருத்தில் கொண்டே நீதிவான் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் சுஹைலை விடுவித்ததுடன் அவரது வெளிநாட்டு பயணங்களையும் தடை செய்தார்.
அதன்படி இவ்வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
Vidivelli
No comments:
Post a Comment