Clean Sri Lanka கட்டாயத்தின் அடிப்படையில் மேற்கொள்ளும் ஒன்றல்ல; அனைவரினதும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டியதாகும் - பிரதமர் ஹரினி - News View

About Us

About Us

Breaking

Thursday, January 9, 2025

Clean Sri Lanka கட்டாயத்தின் அடிப்படையில் மேற்கொள்ளும் ஒன்றல்ல; அனைவரினதும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டியதாகும் - பிரதமர் ஹரினி

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய வேலைத்திட்டமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற விவாதத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, முன்மாதிரியை வழங்குதல், ஊக்குவித்தல், ஈடுபடுத்தல் மற்றும் மாற்றத்தின் தேவையை உணரச் செய்வதே Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் அடிப்படை நோக்கங்களாகும். இதன் மூலம் இலங்கை சமூகத்திற்குள் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். 

அபிவிருத்தியடைந்த தேசமாக இலங்கையை மீள ஸ்தாபிப்பதற்கென சமூக, நெறிமுறை மற்றும் சுற்றுச்சூழல் பூரணத்துவம் என்பவற்றுடன் நாட்டிற்குள் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் ஒன்றுபடுத்தி அதற்கான வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று நல்லதொரு ஆட்சி நிர்வாக எண்ணக்கருவை உறுதிப்படுத்தி, இலங்கை மக்கள் சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் சேர்ந்த உள்ளார்ந்த செயற்பாடுகள் மற்றும் மனித தொடர்புகளுக்கென அடையாளம் காணப்பட்ட விழுமியம் மற்றும் நெறிமுறைகளை ஸ்தாபிப்பதன் ஊடாக புன்னகை நிறைந்த மக்கள் வாழும் நாட்டை உருவாக்குவதே நோக்கமாகும்.

அதற்கென Clean Sri Lanka வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறிமுறைக்கென தேசிய மட்டத்திலான எண்ணக்கரு மற்றும் கொள்கை ரீதியிலான தீர்மானங்களை எடுப்பதற்கு பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல்யமானோர் மற்றும் சமூக செயற்ப்பாட்டாளர்களுடன் கூடிய 19 உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய நிகழ்ச்சித் திட்டங்களை அடையாளம் காணுதல், மக்களை தெளிவுபடுத்துதல், வளங்கள் முகாமைத்துவ ஒருங்கிணைப்பு, முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் உரிய நோக்கத்தை அடையும் வகையில் இடம்பெறுகின்றதா என பின்தொடர்தல் மற்றும் ஏற்படும் இடையூறுகள் தொடர்பில் உரிய நிறுவனங்களை தெளிவுபடுத்தல், வேலைத்திட்டம் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட நோக்கம் நிறைவேறியுள்ளதா? என ஆராய்ந்து பார்த்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் இதில் உள்ளடங்குகின்றன. இவ்வாறான வேலைத்திட்டங்கள் இதற்கு முன்னர் நாட்டிற்குள் முன்னெடுக்கப்படவில்லை.

ஏதாவதொரு செயற்பாட்டை சட்டரீதியாக மாத்திரம் நடைமுறைப்படுத்த அல்லது கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கவே எமது நிறுவனங்களும், அதிகாரிகளும் பழக்கப்பட்டுள்ளனர். தனிநபரின் அகத்திலிருந்து மாற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்த வேலைத்திட்டமாகும்.

இது சற்று உணர்வுபூர்வமானது. இதனை நடைமுறைப்படுத்தும் போது சில குறைபாடுகள் நிகழக்கூடும். சிலர் தவறான நோக்கத்தில் இதனை சீர்குலைக்க முயற்சிக்கலாம்.

வேலைத்திட்டத்தின் எண்ணக்கருவை புரிந்துகொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நாம் வழக்கம் போன்று பணிகளை மேற்கொள்ளும் போது சில சில விடயங்கள் இடம்பெறக்கூடும். எனினும், நாம் எதிர்பார்க்கும் பரிணாமத்தை கட்டாயத்தின் அடிப்படையில் ஏற்படுத்த முடியாது. அனைவரினதும் ஒத்துழைப்பு மற்றும் விருப்பத்தின் அடிப்படையிலேயே அதனை மேற்கொள்ள முடியுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment