தகவல்கள் தெரிந்திருந்தும் அவற்றை மறைப்பது சட்ட ரீதியாகக் குற்றம் - அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Monday, March 25, 2024

தகவல்கள் தெரிந்திருந்தும் அவற்றை மறைப்பது சட்ட ரீதியாகக் குற்றம் - அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

(எம்.மனோசித்ரா)

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்திருந்தும் அவற்றை வெளிப்படுத்தாமல் மறைப்பது சட்ட ரீதியாகக் குற்றமாகும். எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய தகவல்கள் தெரிந்திருந்தால் அவை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முன்னாள் ஜனாதிபதி தெரிவிக்க வேண்டும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, தகவல்கள் தெரிந்திருந்தும் அவற்றை வெளிப்படுத்தாமல் மறைப்பது சட்ட ரீதியாக குற்றமாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கு விசாரணைகள் கொழும்பு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே வழக்கு தொடர்பான காரணிகள் தொடர்பில் ஊடகங்களிடம் தெரிவிப்பதற்கான உரிமை எமக்கு கிடையாது.

அண்மையில் அறிந்து கொண்ட தகவல்கள் தொடர்பில் தனக்கு தெரியும் என்றே முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான தகவல்கள் தெரிந்திருந்தால் அவை தொடர்பில் பொலிஸ் அல்லது குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் தகவல்களை தெரிவித்திருக்க வேண்டும். மாறாக நீதிமன்றத்தில் தெரிவிப்பதற்கான முறைமை எமது நாட்டில் இல்லை.

எனவே முன்னாள் ஜனாதிபதி ஏதேனும் புதிய தகவல்களை அறிந்திருந்தால் அவை தொடர்பில் குற்றப் புலனாய்வுக்கு அவர் தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறான தகவல்களை வழங்கினால் அவற்றை சட்டமா அதிபர் பொலிஸாருக்கு வழங்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் கத்தோலிக்க சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment