பிக்குகள் மாத்திரம் காவி உடை அணியும் சட்டம் இயற்றப்பட வேண்டும் - உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 16, 2024

பிக்குகள் மாத்திரம் காவி உடை அணியும் சட்டம் இயற்றப்பட வேண்டும் - உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

பௌத்த மதத்தை இல்லாதொழிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நாட்டில் காவி உடை அணிவதை பிக்குகளுக்கு மாத்திரம் வரையறுக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, பௌத்த மத கோட்பாடுகளை திரிபுபடுத்தி, பௌத்த மதத்தை இல்லாதொழிக்கும் வகையிலான திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு புலம்பெயர் அமைப்புக்கள் நிதியுதவி வழங்குகின்றன.

பௌத்த மதத்தை அவதிக்கும் வகையிலான கருத்துக்களை இன்று பல்வேறு தரப்பினர் குறிப்பிடுகின்றனர். பௌத்த கோட்பாட்டை திரிபுபடுத்தும் கருத்துக்களை குறிப்பிடும் ஒரு சில பௌத்த தேரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் நிதி கிடைக்கிறது. ஒரு சிலர் தம்மை பிக்கு என்று அடையாளப்படுத்திக் கொண்டு பௌத்த மதத்தை அவமதிக்கிறார்கள்.

காவி உடையை அனைவரும் அணியும் நிலை இன்று காணப்படுகிறது. இவ்வாறானவர்களை கைது செய்யவும் முடியாது. பிக்கு ஒருவர் காவி உடை தரிக்க வேண்டும் என்று ஒழுக்கச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஏனையோர் காவி உடைய அணிய முடியாது என்று சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே காவி உடை அணிந்தவர்கள் எதை செய்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.

தான் விரும்பும் ஆடைகளை அணிந்து கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு. 2300 வருட கால தொன்மையை கொண்டுள்ள பௌத்த கோட்பாட்டை பாதுகாக்க வேண்டுமாயின் இந்த நாட்டில் காவி உடை அணிவதை பிக்குகளுக்கு மாத்திரம் வரையறைக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment