அழகாக அறிக்கைகள் தயாரித்து அவற்றைக் காட்சிப்படுத்துவதால் ஒருபோதும் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து விட்டதாகக் கருத முடியாது - அமைச்சர் நஸீர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 6, 2023

அழகாக அறிக்கைகள் தயாரித்து அவற்றைக் காட்சிப்படுத்துவதால் ஒருபோதும் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து விட்டதாகக் கருத முடியாது - அமைச்சர் நஸீர் அஹமட்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அறிக்கைகளை மட்டும் அழகாகத் தயாரித்து அவற்றை பெரிய திரைகளில் காட்சிப்படுத்துவதால் மட்டும் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து விட்டதாகப் பெருமிதம் கொள்ள முடியாது. யதார்த்தத்தில் வறிய மக்கள் மூவேளை உணவு உண்பதற்குப் பொருளாதார வசதிகளின்றி அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என சுற்றாடல் அமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவ்வாறு உரையாற்றினார்.

வெள்ளிக்கிழமை கச்சேரியில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் பிரதமர் தினேஸ் குணவர்தன முன்னிலையில் மேலும் உரையாற்றிய அமைச்சர் நஸீர் அஹமட், சுதந்திரமடைந்ததிலிருந்தே இலங்கை ஒரு நலன்புரி நாடாகத்தான் தன்னை ஆக்கிக் கொண்டு வந்திருக்கிறது. உலக யுத்தத்திற்குப் பின்னர் உணவு நிவாரணம் எனத் தொடங்கி அது இன்றுவரை ஏதோவொரு வகையில் நலன்புரி சேவைகளாகத்தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.

சமூர்த்தி, ஜனசவிய இவ்வாறு காலத்துக்குக்காலம் வந்த அரசாங்கங்கள் நலன்புரித் திட்டங்களை அமுல்படுத்தி வந்துள்ளன. கடைசியாக இப்பொழுது அஸ்வெசும என்ற பெயரில் நலன்புரித் திட்டம் அரசாங்கத்தினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் எவ்வாறான நிவாரண நலன்புரித் திட்டங்களை வழங்கி வந்துள்ளபோதும் மக்கள் பொருளாதார தன்னிறைவு எனும் அபிவிருத்தியை ஒரு போதும் அடையவில்லை. அபிவிருத்தி பற்றிய அறிக்கைகளை அழகாக சமர்ப்பிக்க முடிந்தாலும் அதன் இலக்கு என்பது அடைய முடியாத எட்டாக்கனியாகவே இருந்து வந்திருக்கின்றது. அரசியல் மயமாக்கலும் இந்தத் தோல்விக்குக் காரணமாக இருந்திருக்கிறது

கிராமிய மட்டத்தில் உணவுப் பாதுகாப்பும் போஷாக்கும் முக்கியமானது. மட்டக்களப்பு மாவட்டத்திலும் முழுக் கிழக்கு மாகாணத்திலும் அத்தனை வளங்களும் விரவிக் கிடக்கின்றன.

வறிய கிராம மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று மாவட்டச் செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட, அபிவிருத்தி அறிக்கைகளில் சொல்லப்பட்ட விடயங்கள் நடந்தேறியிருக்கின்றவா என்று மக்களிடம் கேட்டால் உண்மை நிலைமை எதிர்மாறாகத்தான் இருக்கும்.

ஆகையினால் அழகாக அறிக்கைகள் தயாரித்து அவற்றைக் காட்சிப்படுத்துவதால் மாத்திரம் ஒருபோதம் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து விட்டதாகக் கொள்ள முடியாது. ஆண்டாண்டு காலமாக திரும்பத் திரும்ப இதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

நிதியளிப்பவர்களோ அல்லது அரசோ திருப்திப்படும்படியாக அழகாக அறிக்கைகளைத் தயாரித்து அனுப்புவதில் நாம் கைதேர்ந்தவர்காளக உள்ளோம்.

ஏற்றுமதிப் பொருளாதார அபிவிருத்திகளை அடைந்து கொள்வதாக இருந்தால் நாம் இன்னமும் எவ்வளவோ பாடுபட்டுழைக்க வேண்டியிருக்கிறது.

உணவுப் பாதுகாப்பை நாம் பேசிக் கொண்டிருக்கின்றபோது அங்கே வறிய மக்கள் மூவேளை உணவு உண்பதற்கு வழியின்றி சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை களத்தில் நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த நிலையையில் மாற்றங்களைக் கொண்டு வராமல் அதிகாரிகளாக அலுவலர்களாக நாமெல்லோரும் ஏன் இவ்விடத்தில் வந்தமர்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற கேள்விகளை நமக்குள் நாமே எழுப்ப வேண்டும்.

எல்லோரும் எழுந்து ஒருமித்து நின்று சிந்தித்து அபிவிருத்தி இலக்கை அடைந்து கொள்ள திடசங்கற்பம் பூண வேண்டும்.

கிழக்கு மாகாணம் குறைந்தபட்சம் 75 சத வீத நெல்லரிசை உற்பத்தி செய்ய முடியும் என்பது நான் இங்கே விவசாய அமைச்சராக இருந்த காலந்தொட்டே அறிவேன். எனவே இலக்கை நோக்கிப் பயணிப்போம்” என்றார்.

No comments:

Post a Comment