அமெரிக்க வரலாற்றில் கருப்புப் பக்கங்களாக பதிவான 57 நிமிடங்கள் : நீதிமன்றத்தில் நடந்தது என்ன? : டொனால்ட் ட்ரம்ப் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா? - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 5, 2023

அமெரிக்க வரலாற்றில் கருப்புப் பக்கங்களாக பதிவான 57 நிமிடங்கள் : நீதிமன்றத்தில் நடந்தது என்ன? : டொனால்ட் ட்ரம்ப் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா?

ஆபாசப்பட நடிகை வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர்கள், முன்னாள் அதிபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ரகசிய காவல் படை புடை சூழ, நியூயார்க் நேரப்படி, நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு டிரம்ப் வருகை தந்தார்.

கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, ரகசிய வழியில் நீதிமன்றத்திற்குள் சென்றார். அரசியல் அரங்கில் பகட்டான, வெகு ஆர்ப்பாட்டமான அரசியல்வாதி என்று பெயரெடுத்த ட்ரம்ப், நீதிமன்றத்திற்குள் நீதிபதி முன்னிலையில் மிகவும் அமைதியாக காணப்பட்டார்.

நீதிபதியின் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளிலேயே அவர் பதிலளித்தார். அவர் மீதான 34 குற்றச்சாட்டுகளையும் நீதிபதி வாசித்த போது, நான் குற்றவாளி இல்லை என்று மட்டுமே அவர் பதிலளித்தார்.

உடல் மொழியிலோ, முக பாவனைகளிலோ அவர் எந்தவொரு உணர்ச்சிகளையும் வெளிக்காட்டவில்லை.

சுமார் 57 நிமிடங்கள் நீதிமன்றத்தில் இருந்த ட்ரம்ப், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் இருந்து நேரடியாக, புளோரிடாவில் உள்ள தனது எஸ்டேட்டிற்கு விரைந்த ட்ரம்ப், அங்கே தனது ஆதரவாளர்களிடையே பேசினார். அப்போது, இந்த வழக்கு நாட்டிற்கே பெரும் அவமானம் என்று அவர் விமர்சித்தார்.

கடந்த சில வாரங்களாக, இந்த விவகாரம் குறித்து நடுவர் மன்றம் தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருகிறது. தன்னுடன் தொடர்பு இருந்தது குறித்து, வெளியே சொல்லக்கூடாது என ஸ்டார்மி டேனியல்ஸ் என்னும் அபாச பட நடிகைக்கு ட்ரம்ப் பணம் கொடுத்தாரா என்பது தொடர்பாக பல ஆதாரங்களை அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

2016ஆம் ஆண்டு தேர்தலின்போது ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக அதிபர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார் ட்ரம்ப். அப்போது அவருக்கு வயது 70. அந்த தேர்தல் நடப்பதற்கு சில காலத்திற்கு முன்னர்தான் ட்ரம்ப் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டார் என கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

நியூயோர்க்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ட்ரம்ப் வந்து சேர்ந்தார்.

அமெரிக்க ஜனாதிபதிகள், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் ரகசியக் காவல் படையினர் புடைசூழ நீதிமன்றத்திற்கு வந்த ட்ரம்ப், வழக்கமான நீலநிற கோட்டும், சிவப்பு நிற டையும் அணிந்திருந்தார்.

கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, ரகசிய வழியில் நீதிமன்றத்திற்குள் சென்றார். அரசியல் அரங்கில் பகட்டான, வெகு ஆர்ப்பாட்டமான அரசியல்வாதி என்று பெயரெடுத்த ட்ரம்ப், நீதிமன்றத்திற்குள் நீதிபதி முன்னிலையில் மிகவும் அமைதியாக காணப்பட்டார்.

நீதிமன்றத்திற்குள் நுழையும் போதே சற்று மந்தமாக காணப்பட்ட ட்ரம்ப், தனக்காக காத்துக் கொண்டிருந்த வழக்கறிஞர்களை நோக்கி மெதுவாக நடந்து சென்றார்.

அங்கே, ட்ரம்ப் செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை. அவரது உடல் மொழி மற்றும் முக பாவனைகள் பெரிய அளவில் எதையும் வெளிப்படுத்துவதாக இல்லை.

ட்ரம்ப் ஆஜராவதை செய்தியாக்குவதற்காக அங்கே கூடியிருந்த பத்திரிகையாளர்கள் மொபைல் போன் மற்றும் லப்டப்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படவில்லை.

நீதிபதி ஜூவான் மெர்ச்சான் வந்ததும் ட்ரம்ப் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.

நீதிமன்றத்திற்கு வெளியே அரசியல் மற்றும் ஊடக வெளியில் மிகவும் பரபரப்பாக இந்த வழக்கு பேசப்பட்டாலும், வழக்கைக் கையாறும் நீதிபதி மெர்ச்சான் ஒருபோதும் குரலை உயர்த்தவே இல்லை. வெகு நிதானமாக வழக்கை கையாண்டார்.

வழக்கறிஞர்களுக்கான காலக்கெடு, அடுத்த விசாரணைக்கான திகதி நிர்ணயம் போன்ற வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளாகவே அது அமைந்தது.

அரசியல் அரங்கில் வெகு ஆடம்பரமாக, ஆரவாரிக்கக் கூடியவரான ட்ரம்ப் நீதிமன்றத்தில் ஒரு சில வார்த்தைகளையே உதிர்த்தார்.

ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுக்களை நீதிபதி வாசிக்கையில் ட்ரம்ப், "நான் குற்றம் செய்யவில்லை" என்று மட்டுமே பதிலளித்தார்.

ஒரு கட்டத்தில் நீதிபதி மெர்ச்சான், வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளின் போதும் நீங்கள் நேரில் வர அனுமதி உண்டு என்பதை டிரம்பிடம் நினைவூட்டினார். நீங்கள் இதை புரிந்து கொண்டீர்களா என்று நீதிபதி கேட்க, ட்ரம்ப் "ஆம்" என்று ஒரே வார்த்தையில் பதிலுரைத்தார்.

நீதிமன்றத்திற்குள் கட்டுக்கடங்காமல் அல்லது விசாரணையை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டால், விசாரணையில் ஆஜராவதற்கான உரிமையை இழக்க நேரிடும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

ட்ரம்ப் மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டார் என்று குற்றம்சாட்டிய அரசு தரப்பு வழக்கறிஞர், "என் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டால் உயிரிழப்பும் மற்றும் பேரழிவுமே மிஞ்சும்" என்று குறிப்பிட்டு அவர் பதிவிட்ட ஒரு சமூக ஊடகப் பதிவை சுட்டிக்காட்டினார்.

தன் மீதான குற்றச்சாட்டுக்கள் ஒரு மிகப்பெரிய அநீதி என்று நம்பும் ட்ரம்ப், மனம் நொந்துபோய் அவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என்று ட்ரம்ப் தரப்பு வழக்கறிஞர்கள் பதிலளித்தனர்.

மிகவும் மோசமான சொல்லாடல்களையும், வார்த்தை பிரயோகங்களையும் விரக்தியில் செய்துவிட்டார் என்று நியாயப்படுத்தும் உங்களை வாதங்களை ஏற்க முடியாது என்று நீதிபதி மெர்ச்சான் கூறினார்.

அவதூறு பேச்சு கூடாது என்ற எனது முந்தைய எச்சரிக்கை ஒரு வேண்டுகோள்தான், உத்தரவு இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, இந்த விவகாரம் மீண்டும் எழுந்தால் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்று எச்சரித்தார்.

ட்ரம்ப் மீதான வழக்கின் நீதிமன்ற நடைமுறைகள் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தன.
ஸ்டோர்மி தொடர்ந்த மற்றொரு வழக்கில் ட்ரம்புக்கு சாதகமாக தீர்ப்பு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும், மீண்டும் ஜனாதிபதியாகும் முனைப்பில் இருப்பவருமான ட்ரம்பை சிக்கலில் சிக்க வைத்த ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ், ட்ரம்புக்கு எதிரான மற்றொரு வழக்கில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்.

ட்ரம்பை விட்டு விலகிவிடுமாறு தன்னையும், தன் குழந்தைகளையும் ஒருவர் மிரட்டியதாக ஊடகங்களிடம் ஸ்டோர்மி டேனியல்ஸ் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். அவை அனைத்தும் பொய்யான கற்பனை, புனைவுக்கதை என்று குற்றம்சாட்டிய ட்ரம்பை எதிர்த்து ஸ்டோர்மி டேனியல்ஸ் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தன்னுடைய அனுமதி இல்லாமல் தனது வழக்கறிஞர் மிக்கேல் அவெனாட்டியால் தொடரப்பட்டது என்று அவர் வாதிட்டார். சர்ச்சைக்குரிய அவரது வழக்கறிஞர் மிக்கேல் அவெனாட்டி தனது கட்சிக்காரர்களிடம் திருடிய குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார்.

அந்த அவதூறு வழக்கில்தான் ஸ்டோர்மி டேனியல்சுக்கு எதிராக தீர்ப்பு வந்திருக்கிறது. அதுவும், ஸ்டோர்மி டேனியல்ஸ் உடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ட்ரம்ப் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் இந்த தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.

இந்த அவதூறு வழக்கில் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத் தவறிய ஸ்டோர்மி டேனியல்ஸ், வழக்குச் செலவிற்காக ட்ரம்புக்கு இந்திய மதிப்பில் சுமார் 10 கோடி ரூபாயை அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் ட்ரம்பின் இரு மகன்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "என்னுடைய டிசேர்ட் விற்பனை அதிகரித்திருக்கிறது, நீதிமன்ற உத்தரவுப்படி ட்ரம்புக்கு பணம் செலுத்தும் அளவுக்கு அது போதுமானதாக இருக்கிறது என்று சொல்ல அவர் வெளியே இருப்பது மகிழ்ச்சி" என்று டோனால்ட் ட்ரம்ப் ஜூனியர் கிண்டலாக குறிப்பிட்டார்.

ட்ரம்ப் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு என்ன?

2006ஆம் ஆண்டில் தனக்கும், ட்ரம்புக்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறுகிறார் ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ். ஆனால் இதனை ட்ரம்ப் எப்போதுமே மறுத்து வந்திருக்கிறார்.

2016ஆம் அண்டு, தனக்கும் ட்ரம்புக்கும் இடையே இருந்த உறவு குறித்து, ஊடகங்களிடம் தெரிவிக்கப்போவதாக கூறியிருக்கிறார் ஸ்டார்மி டேனியல்ஸ்.

அப்போது ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோச்சன் என்பவர், ஸ்டார்மி டேனியல்ஸுக்கு சுமார் 1,30,000 அமெரிக்க டொலர்களை (இந்திய மதிப்பில் 1.07 கோடி ரூபாய்) வழங்கி, இது குறித்து வெளியே பேசக்கூடாது என சமரசம் செய்துள்ளார். இப்படி அளிக்கப்படும் பணத்தை ஹஷ் மணி (hush money) என குறிப்பிடுகின்றனர்.

இதுபோன்று பணம் வழங்கப்படுவது சட்டத்திற்கு புறம்பானது அல்ல. ஆனால் சிக்கல் எங்கே ஆரம்பித்தது என்றால், ஸ்டார்மி டேனியல்ஸுக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து, ட்ரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோச்சனின் ’செலவுகளுக்கான பணத்தை திருப்பி செலுத்துதல் கணக்கில்’ பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சட்டக் கட்டணங்களுக்காக பணம் செலுத்துவதாகக் கூறி தனது வணிகப் பதிவுகளை பொய்யாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அப்போது தேர்தல் நடைபெறுவதற்கு சற்று முந்தைய காலகட்டத்தில் இந்த விவகாரங்கள் நடைபெற்றுள்ளன. எனவே தேர்தலின்போது பின்பற்ற வேண்டிய பண பரிமாற்றத்தில் விதிகள் மீறப்பட்டதாகவும் இந்த விவகாரம் கையாளப்படலாம்.

ஸ்டோர்மி டேனியல்ஸ் யார்?

ஸ்டோர்மி டேனியல்ஸின் இயற் பெயர் ஸ்டெபானி கிளிஃபோர்ட். 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகி வந்த டொனால்ட் ட்ரம்ப் மீது அவர் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். 2006ஆம் ஆண்டு ஜூலையில் கோல்ப் காட்சிப் போட்டி ஒன்றில் ட்ரம்பை அவர் சந்தித்தாக ஊடக நேர்காணல்களில் அவர் கூறினார்.

கலிபோர்னியா - நெவேடா மாகாணங்களுககு இடையே லேக் டாஹோவில் உள்ள தனது ஹோட்டல் அறையில் இருவரும் உடலுறவு கொண்டதாக அவர் கூறினார். அந்த வேளையில் அவரது குற்றச்சாட்டுக்களை ட்ரம்பின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்தார்.

தனது குற்றச்சாட்டுக்கள் குறித்து மௌனம் காக்குமாறு ட்ரம்ப் கேட்டுக் கொண்டாரா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, "இதற்காக ட்ரம்ப் வருத்தப்படுவதாக தெரியவில்லை. அவர் கர்வமிக்கவர்" என்று ஸ்டோர்மி டேனியல்ஸ் பதிலளித்தார்.

ட்ரம்ப் - ஸ்டோர்மி டேனியல்ஸ் பாலுறவு நடந்ததாகக் கூறப்படும் கால கட்டத்தில் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் குழந்தையை பெற்றெடுத்திருந்தார்.

இந்த வழக்கில் குறிப்பிடப்படும் மற்றொரு பெண் யார்?

முன்னாள் ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாகத்தான் ட்ரம்ப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டப்பட்டிருக்கிறது. எனினும் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் இருந்து மற்றொரு பெண்ணைப் பற்றியும் குறிப்பிடப்பட்டது.

பெண் - 1 என்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அவரது பெயர் கரேன் மெக்டோகல். முன்னாள் பிளேபாய் மொடல்.

ட்ரம்புடன் தனக்கு தொடர்பு இருந்ததாக அவர் கூறியிருந்தார். 10 மாதங்கள் வரை இந்தத் தொடர்பு நீடித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதை ட்ரம்ப் முற்றிலுமாக மறுத்து வந்தார்.

இண்டியானா மாநிலத்தில் பிறந்த இவர் 2006ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள பிளேபாய் விடுதியில் ட்ரம்பை சந்தித்ததாகக் கூறுகிறார். ஒவ்வொரு மாதமும் குறைந்தது 10 முறை தாங்கள் சந்தித்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா?

தற்போதைய குற்றச்சாட்டுக்கள் மட்டுமல்ல, தண்டனையே விதிக்கப்பட்டாலும், ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் தொடர்வதைத் தடுக்க முடியாது.

என்ன நடந்தாலும், தான் பின் வாங்கப்போவதில்ல என்பதற்கான சமிக்ஞைகளை ட்ரம்பே கொடுத்துள்ளார். எனவே, அவர் தொடர்ந்து பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையில், அமெரிக்க சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வேட்பாளரை பிரசாரம் செய்வதில் இருந்தும், ஜனாதிபதியாகப் பணியாற்றுவதில் இருந்தும், ஏன் கைதாவதில் இருந்தும் கூட தடுக்க முடியாது.

1920 இல் யூஜின் டெப்ஸ் என்பவர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு 9 லட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தார். எனவே சிறைத் தண்டனை பெற்றாலும் அவர் போட்டியிட முடியும்.

எனினும், டிரம்ப் கைது செய்யப்பட்டால், ஜனாதிபதித் தேர்தலுக்கான அவரது பிரசாரத்தில் அது சிக்கலை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்க அரசியல் அமைப்பிற்குள் ஏற்கெனவே உள்ள அப்பட்டமான பிளவுகளை இது ஆழமாக்கும்.

நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய ட்ரம்ப்

ட்ரம்ப் தனது இருக்கையில் இருந்து எழுந்ததுமே ரகசிய காவல் படையினர் அவரை சூழ்ந்து கொண்டனர்.

ட்ரம்ப் தனது வழக்கறிஞர்களிடம் சன்னமான குரலில் மெதுவாக பேசினார். இதனால், சற்று தொலைவில் அமர்ந்திருந்த பத்திரிகையாளர்களால் அவர் என்ன பேசினார் என்பதை கேட்க முடியவில்லை.

நீதிமன்றத்தின் மையத்தில் இருந்த நடைபாதை வழியே நடந்து சென்று பின்வாசல் வழியே ட்ரம்ப் வெளியேறினார். வெளியே நின்றிருந்த ஊடகத்தினரிடம் அவர் எதையும் பேசவில்லை. அவர் மிகவும் இறுக்கமாக காணப்பட்டார்.

அமெரிக்க ஜனாதிபதிகளாக பதவி வகித்தவர்களில் குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்ட முதல் நபர் டொனால்ட் ட்ரம்ப்தான். அந்த வகையில், நீதிமன்றத்தில் ட்ரம்ப் ஆஜரான அந்த 57 நிமிடங்களும் அமெரிக்க அரசியல் வரலாற்றில், கருப்புப் பக்கங்களாக பதிவாகியுள்ளன.

No comments:

Post a Comment