முகம்மது நபி பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் : பாஜகவைச் சேர்ந்த இரு தலைவர்களின் கைதை வலியுறுத்தி போராட்டங்கள் : பல மாநிலங்களில் வன்முறை : இரண்டு பேர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 11, 2022

முகம்மது நபி பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் : பாஜகவைச் சேர்ந்த இரு தலைவர்களின் கைதை வலியுறுத்தி போராட்டங்கள் : பல மாநிலங்களில் வன்முறை : இரண்டு பேர் உயிரிழப்பு

முகம்மது நபி பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பாஜகவைச் சேர்ந்த இரு தலைவர்களை கைது செய்ய வலியுறுத்தி இந்திய நாட்டின் பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன.

நூபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய அந்த இரு முன்னாள் நிர்வாகிகளையும் கைது செய்ய வலியுறுத்தி நடந்த இந்த போராட்டங்களின்போது சில இடங்களில் வன்முறை வெடித்தது.

அந்த வன்முறையின் காரணமாக, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வெள்ளிக்கிழமையன்று இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏஎன்ஐ செய்தி முகமையின்படி, ராஞ்சியிலுள்ள ரிம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் வன்முறையால் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட இருவர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.

வெள்ளிக்கிழமை வழிபாடுகளுக்குப் பிறகு, நாட்டின் பல நகரங்களில் கடும் போராட்டங்களும் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.

ராஞ்சியில், கல்வீச்சு, வாகங்களுக்குத் தீ வைத்தல், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் ஆகிய சம்பவங்கள் நடைபெற்றன. இந்தச் சம்பவங்களின் போது, பொதுமக்கள் பலரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வன்முறை சம்பவம் காரணமாக, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, ராஞ்சியில் வன்முறை சம்பவங்கள் நடந்த இடங்களில் ஊரடங்கை அமல்படுத்தியது. அதற்குப் பிறகு சூழ்நிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

நகரத்தின் 12 பகுதிகளில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ராஞ்சி மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளதாக ஏஎன்ஐ கூறுகிறது.
திருப்தியடையாத இஸ்லாமியர்கள்
டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. கடந்த மாதம் நூபுர் ஷர்மா தனியார் ஆங்கில தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் ஞானவாபி பள்ளிவாசல் தொடர்பான சர்ச்சை குறித்து விவாதிக்கப்பட்டது.

நூபுர் ஷர்மா பேசும்போது, ​​இந்த முழு சர்ச்சை எங்கிருந்து தொடங்கியது என்று குறிப்பிட்டு சில கருத்துகளை வெளியிட்டார். அப்போது முகம்மது நபி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை அவர் தெரிவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதேபோல, டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நவீன் குமார் ஜிண்டாலும் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக ட்வீட் செய்த செயல்பாடு சர்ச்சையை தோற்றுவித்தது.

இதைத் தொடர்ந்து நூபுர் ஷர்மாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து பாஜக மேலிடம் நடவடிக்கை எடுத்தது. நவீன் ஜிண்டாலை கட்சியில் இருந்தே பாஜக மேலிடம் நீக்கியதாக அறிவித்தது.

ஆனால் இந்த நடவடிக்கையால் இஸ்லாமியர்கள் திருப்தியடையவில்லை. சம்பந்தப்பட்ட இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுத்தனர்.
டெல்லியில் போராட்டம்
இதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமா பள்ளிவாசலுக்கு வெளியே இஸ்லாமியர்கள் திரண்டனர்.

நூபுர், நவீன் ஜிண்டாலை கைது செய்ய வலியுறுத்தும் பதாகைகளை அவர்கள் வைத்திருந்தனர். சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட இரு பாஜகவினரையும் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் போராட்டத்தின்போது கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஜாமா பள்ளிவாசலின் ஷாஹி இமாம் கூறுகையில், மஸ்ஜித் கமிட்டியால் எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றார்.

மத்திய டெல்லி காவல் சரக துணை ஆணையர் ஸ்வேதா செளஹான், செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் பேசும்போது, "ஜாமா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக சுமார் 1500 பேர் கூடியிருந்தனர். பிரார்த்தனை முடிந்ததும், 300 பேர் வெளியே வந்து நூபர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்," என்றார்.
உ.பி நகரங்களில் கல் வீச்சு மற்றும் தீ வைப்பு
இதே நேரத்தில், உத்தர பிரதேசத்தில் லக்னெள, சாஹாரன்பூர், மொராதாபாத் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கு வெளியே இஸ்லாமியர்கள் வீதிகளில் ஆயிரக்கணக்கில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சாஹாரன்பூரில், மக்கள் பச்சை வண்ண மத கொடிகள் மற்றும் இந்திய தேசிய மூவர்ணக் கொடியுடன் போராட்டப் பகுதிக்கு வந்தனர்.

லக்னெளவில் உள்ள மவுன்ட் வாலி பள்ளிவாசல் முன்பு திரண்ட முஸ்லிம்கள் நூபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் கைதை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் சாஹாரன்பூரில் பள்ளிவாசலுக்கு வெளியே இஸ்லாமியர்கள் திரண்டு கோஷமிட்டனர்.

பிரயாக்ராஜில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ​​சில கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. சில இடங்களில் காவல்துறையினர் மீதும் கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து போராட்டக் காரர்களை நோக்கி காவல்துறையினரும் கற்களை வீசினர். இதைத் தொடர்ந்து வன்முறை தீவிரமாகாமல் தடுக்க போராட்டக் காரர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை போலீஸார் பயன்படுத்தினர்.

உத்தர பிரதேச மாநிலம் தியோபந்தில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதி அளிக்கவில்லை. லக்னெளவில் உள்ள மவுன்ட் வாலி பள்ளிவாசலுக்கு வெளியே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ட்ரோன்கள் மூலம் அங்குள்ள சூழலை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
முதல்வர் பிறப்பித்த உத்தரவு
இதற்கிடையில், பல நகரங்களில் நடந்த கல் வீச்சு சம்பவங்களை அடுத்து உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், டிஜிபி டி.கே.தாக்குர் , "முக்கிய பள்ளிவாசல் இருக்கும் இடத்தில் போதுமான ஏற்பாடுகளை செய்துள்ளோம், அங்கு ஏராளமானோர் வருகிறார்கள். மதத் தலைவர்கள், மௌலவி, மௌலானா போன்றவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆத்திரமூட்டல் செயல்பாடுகளில் எவரும் ஈடுபட வேண்டாம். பதற்றமான பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தியிருக்கிறோம். ஆளில்லா விமானங்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்," என்று கூறினார்.

இந்தப் போராட்டங்கள் குறித்து மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவ்னிஷ் அவஸ்தி கூறுகையில், தேவையில்லாமல் அமைதியை சீர்குலைக்க முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உ.பி. மக்கள் நல்லிணக்கத்தைப் பேணுமாறு கேட்டுக் கொள்கிறேன். சிலர் பிரயாக்ராஜில் கலவரத்தை ஏற்படுத்த முயன்றனர். அவர்களை போலீசார் எச்சரிக்கையுடன் கலைத்தனர். இளைஞர்கள் தேவையில்லாமல் வீதிக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்," என்று தெரிவித்தார்.
பிற மாநிலங்களில் போராட்டம்
மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் ஹெளராவிலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. கொல்கத்தாவில் உள்ள பார்க் சர்க்கஸ் பகுதியில் இஸ்லாமியர்கள் பெருமளவில் கூடி முழக்கமிட்டனர். சில இடங்களில் போராட்டக் குழுவில் இருந்தவர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

நூபுர் ஷர்மாவின் கருத்துக்கு எதிராக மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் ஏஐஎம்ஐஎம் கட்சியினர் கண்டன பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து அங்கு நடந்த போராட்டத்தில் முஸ்லிம்கள் திரளாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். நவி மும்பையில், முஸ்லிம் பெண்கள் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட பாஜக பிரமுகர்களுக்கு எதிராக பேரணி நடத்தினர்.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நூபுர், நவீன் ஜிண்டாலுக்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் ராசா அகாடமியினர் போராட்டம் நடத்தினர்.

இதுதவிர பஞ்சாபின் லூதியாணா, தெலங்கானாவில் ஹைதராபாத், சத்தீஸ்கரில் உள்ள ராஞ்சி ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஞ்சியில் நடந்த கல் வீச்சு, கடைகள் அடைக்கப்பட்டன. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதாகவும், இந்த சம்பவத்தில் போலீசார் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) அனிஷ் குப்தா கூறுகையில், "பதற்றமாக இருந்தாலும் நிலைமை தற்போதுவரை கட்டுக்குள் உள்ளது. இயன்ற அனைத்தையும் முயற்சித்து வருகிறோம். போராட்ட பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்தில் உள்ளனர்," என்று தெரிவித்தார்.
Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

Twitter பதிவை கடந்து செல்ல, 5

Twitter பதிவின் முடிவு, 5

Twitter பதிவை கடந்து செல்ல, 6

Twitter பதிவின் முடிவு, 6

No comments:

Post a Comment